ஊட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் மழை ! 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

ஊட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் மழை ! 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

Update: 2019-06-12 10:04 GMT

அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயலால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், புயல் காரணமாக தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் வாயு, வருகிற 13-ஆம் தேதி அன்று குஜராத்தின் போர் பந்தர் - மஹுவா இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 135 முதல் 140 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதே நேரத்தில் தமிழகத்தில் குமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த48 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.


இதே நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குற்றாலம் ஐந்தருவி, பிரதான அருவிகள் மீண்டும் பெருகி பாயத் தொடங்கி உள்ளன.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தக்கலை, அழகிய மண்டபம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மும்பையில் கனமழை பெய்து வருவதால் அங்கிருந்து சென்னைக்கு விமானங்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 


இதனிடையே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நீர்வரத்தும் 163கன அடியில் இருந்து காலை 325 கன அடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 100 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. 


Similar News