'140 கோடி இந்தியர்களுக்காக இன்னும் கடுமையாக பாடுபடுவேன்'- லட்சத்தீவில் பிரதமர் மோடி!
லட்சத்தீவில் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைத்த மோடி இந்தியர்களுக்காக மென்மேலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.
பிரதமர் மோடி கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் தமிழ்நாடு, லட்சத்தீவு ,கேரளா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். லட்சத்தீவில் பல்வேறு திட்டங்களை நாட்டு அர்ப்பணித்தார். இந்த நிலையில் லட்சத்தீவில் அவர் உரிய உபகரணங்களுடன் ஆழ்கடல் நீச்சல் சாகசத்தில் ஈடுபட்ட தகவலை புகைப்படங்களுடன் தனது எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்டார். ஆழ்கடல் உயிரினங்கள் பற்றிய ஆய்வுக்காக இந்த பயணத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார் .பிரதமர் மோடி மேலும் கூறியிருப்பதாவது:-
தங்களுக்குள் இருக்கும் சாகசக்காரரை வெளிக்கொணர விரும்பும் ஒவ்வொருவருக்கும் லட்சத்தீவு சரியான தேர்வு . நான் அங்கு தங்கியிருந்தபோது கடலுக்கு அடியில் நீச்சல் பயணித்து முயன்று பார்த்தேன் . அது உயர்ந்த அனுபவமாக இருந்தது. லட்சத்தீவின் இயற்கை அழகுடன் அதன் அமைதியும் மனதை கவர்வதாக இருக்கிறது. '140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடுமையாக பாடுபடுவது பற்றி சிந்திக்க அது எனக்கு வாய்ப்பாக அமைந்தது'. லட்சத்தீவு மக்களுடன் இருக்கும் வாய்ப்பும் அமைந்தது. அவர்களின் வியத்தக அரவணைப்பும் லட்சத்தீவின் அசத்தும் அழகும் இன்னும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது .
அகட்டி, பங்காரம் ,கவரட்டி ஆகிய ஊர்களில் மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது .அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி வளர்ச்சி திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே மத்திய அரசின் நோக்கம். பயனாளிகளுடனும் உரையாடினேன். அதன் மூலம் திட்டங்களினால் ஏற்படும் பலன்களை நேரடியாக அறிய முடிந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். லட்சத்தீவில் உள்ள அழகிய கடற்கரைகளில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
SOURCE :DAILY THANTHI