இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பதவி மோதல் உறுதி- அமித்ஷா!

Update: 2024-04-30 06:06 GMT

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பதவி மோதல் ஏற்படும் - அமித்ஷா!

இந்தியா கூட்டணி ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் அதன் தலைவர்கள் பிரதமர் பதவிக்காக தங்களுக்குள் மோதிக் கொள்வார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.பீகார் மாநிலம் ஜஞ்சார்பூர் மற்றும் பேகுசராய் மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் யார் பிரதமராக வருவார்கள்? ஸ்டாலினா? சரத் பவாரா? மம்தா பானர்ஜியா? ராகுல் காந்தியா ?இவர்களில் யார் பிரதமர்? இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்கூட்டணியின் தலைவர்கள் பிரதமர் பதவிக்காக தங்களுக்குள் மோதிக் கொள்வார்கள். பிரதமர் பதவியை ஆண்டுக்கு ஒருவர் வீதம் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள் இதுதான் நாட்டை வழி நடத்தும் முறையா?

முத்தலாக் நடைமுறை நமக்குத் தேவையா? முஸ்லிம் தனி சட்டத்தை தாங்கள் பாதுகாப்போம் என்று இந்தியா கூட்டணி தலைவர்களான ராகுல் காந்தியும் லாலு பிரசாத்தும் கூறுகிறார்கள். ஆனால் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தும் .மக்களவைத் தேர்தலில் மோடியின் வெற்றியும் அவர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப் போவதும் உறுதி. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களது குழந்தையை போன்று காத்து வந்தன.

370 -வது பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் எனக் கூறி ராகுல்காந்தி நம்மை அச்சுறுத்த முயன்றார். ஆனால் 370 வது பிரிவை நீக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்த போது ஒரு கூழாங்கல்லைக் கூட தூக்கி வீச யாரும் துணியவில்லை .இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மீது ராகுல் காந்திக்கு திடீரென்று பாசம் ஏற்பட்டுள்ளது .இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராகவே காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. மண்டல் கமிஷனை காங்கிரஸ் எதிர்த்தது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து மோடி தலைவராக உருவெடுத்தார். அவரது ஆட்சி காலத்தில் இந்த சமூகம் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகாரம் பெற்றது என்றனர்.


SOURCE :Dinaseithi

Similar News