பிப்ரவரி 26 முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடு உள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-08 05:30 GMT

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசு துறைகளில் காலியாக இருக்கும் 30 சதவீதத்திற்கும் மேலான இடங்களை நிரப்ப வேண்டும் என் மன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் அரசு ஊழியர்கள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது.


அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த முடிவு செய்வதற்காக ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், செல்வம் ,மயில் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும், முப்பதாம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் ,அடுத்த மாதம் ஐந்தாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது .


அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 10-ஆம் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும் , அதே மாதம் 15 -ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், அதை அடுத்து 26 ஆம் தேதி முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News