காஷ்மீரில் நுழையும் அந்நியர்கள் எவரும் உயிருடன் திரும்ப முடியாது; ராணுவ கமாண்டர் கே.ஜே.எஸ்.திலான் திட்டவட்டம்

காஷ்மீரில் நுழையும் அந்நியர்கள் எவரும் உயிருடன் திரும்ப முடியாது; ராணுவ கமாண்டர் கே.ஜே.எஸ்.திலான் திட்டவட்டம்

Update: 2019-02-19 12:21 GMT

காஷ்மீரில் நுழையும் அந்நியர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று ராணுவ கமாண்டர் கே.ஜே.எஸ்.திலான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.


சினார் படையின் (காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ராணுவப் பிரிவு) கமாண்டர் லெஃப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். திலான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் பேசியதாவது: ''பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல், நீண்ட நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்துள்ளது. இத்தகைய தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தீவிரவாதத் தாக்குதல் நடந்து 100 மணி நேரத்துக்குள்ளாக, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முக்கியத் தளபதியைச் சுட்டுக் கொன்றுள்ளோம். துப்பாக்கியை எடுப்பவர் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டு, அகற்றப்படுவர். என்ன மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் விசாரணை நடைபெற்று வருவதால், அத்தகவல்களை வெளியிட முடியாது. பதிலடித் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தெளிவாக இருக்கிறோம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் நுழையும் அந்நியர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள். இந்தக் கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஐஎஸ்ஐக்கும் பங்கு இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


பாகிஸ்தான் ராணுவத்தின் குழந்தைதான் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம். காயத்தின் காரணமாக விடுப்பில் சென்றிருந்த பிரிகேடியர் ஹர்தீப் சிங், தாமாக முன்வந்து விடுப்பை ரத்து செய்துவிட்டு, தாக்குதல் களத்துக்கு வந்தார். அங்கேயே தங்கியவர், தனது வீரர்களைப் போரிடச் செய்தார். காஷ்மீரி சமுதாயத்தில், பெண்கள் குறிப்பாக அன்னையர்  முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நீங்கள் (தாய்) மனது வைத்தால் போதும். தீவிரவாதத்தில் இணைந்துள்ள மகன்களை மீட்டு, இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியும். துப்பாக்கியை எடுத்தவன், துப்பாக்கியால்தான் சாவான். அதே நேரத்தில் அவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தால் காப்பாற்றப்படுவர்'' என்று கே.ஜே.எஸ்.திலான் தெரிவித்துள்ளார்.




Similar News