குடியரசு தின அணிவகுப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இஸ்ரோவின் வெற்றியை பிரதிபலித்த ஊர்தி!
டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த இஸ்ரோவின் தொடர் வெற்றிய பிரதிபலிக்கும் ஊர்தி பிரபலம் அடைந்தது.
டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். 40 ஆண்டுகளுக்கு பிறகு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அவர் விழாவிற்கு வந்தார். அணிவகுப்பில் முதல் முறையாக முப்படைகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். டெல்லி கடமை பாதையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கின. விழாவில் பங்கேற்க காலை 10:20 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரானும் புறப்பட்டனர்.
காரில் வரும் வழக்கத்தை மாற்றி 40 ஆண்டுகளுக்கு பிறகு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வரும் வழக்கம் மீண்டும் பின்பற்றப்பட்டது. அந்த வகையில் ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஜனாதிபதியும் சிறப்பு விருந்தினரும் வந்தனர் .காலை 10:30 மணிக்கு அவர்கள் வந்தவுடன் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கின. டெல்லி கடமை பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் கண்கவர் அணிவகுப்பு இடம்பெற்றது. அந்த வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் ஒரு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்றது.
அந்த ஊர்தி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது, பிரதமர் மோடியால் சிவசக்தி முனை என பெயரிடப்பட்ட விண்கலம் தரையிறங்கிய இடம் ,விண்கலத்தை நிலவுக்கு எடுத்துச் சென்ற மார்க்-3 ராக்கெட் ஆகியவற்றை காட்சிப்படுத்தியது. மேலும் சூரியனை வெற்றிகரமாக ஆய்வு செய்து வரும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணம் மற்றும் எதிர்கால பயணங்கள் ஆன ககன்யான் மற்றும் பாரதிய அந்தரிஷ் நிலையம் போன்றவற்றையும் இஸ்ரோவின் அலங்கார ஊர்தி பிரதிபலித்தது. அதேபோல் இஸ்ரோவின் பல்வேறு பணிகளில் பெண் விஞ்ஞானிகளின் பங்கேற்பையும் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தியது.
SOURCE :DAILY THANTHI