இந்தியாவின் வரலாற்றை இந்திய நோக்கிலிருந்து வரிசைப்படுத்த வேண்டியது அவசியம் : அதிரடி காட்டிய மத்திய அமைச்சர் அமித்ஷா.!

இந்தியாவின் வரலாற்றை இந்திய நோக்கிலிருந்து வரிசைப்படுத்த வேண்டியது அவசியம் : அதிரடி காட்டிய மத்திய அமைச்சர் அமித்ஷா.!

Update: 2019-10-17 12:56 GMT

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் குப்தவம்ச வீரர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யர் பற்றிய கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், திறன் மேம்பாடு, தொழில்முனைவுத்திறன் இணையமைச்சர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.


ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை பாதுகாத்து மேம்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அமித் ஷா வலியுறுத்தினார்.


பண்டைய இந்தியாவை ஒன்றுபடுத்தியதில் குப்த சாம்ராஜ்யம் முக்கிய பங்காற்றியது என்று அவர் கூறினார். குப்த வம்சத்தின் சமுத்திர குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று குறிப்பிட்ட திரு அமித் ஷா அவரது ஆட்சியின் கீழ் இந்தியாவின் எல்லைகள் துணைக்கண்டம் முழுமைக்கும் விரிவடைந்தது என்று கூறினார்.


இந்தியாவின் பண்பாட்டு நோக்கில் அதன் வரலாற்றை கால அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு உதாரணமாக வீர் சாவர்க்கரை அவர் எடுத்துக் காட்டினார். சாவர்க்கர் 1857-ஆம் ஆண்டு புரட்சியை இந்தியாவின் முதலாவது சுதந்திரப்போர் என்று குறிப்பிட்டிருந்ததை திரு ஷா சுட்டிக்காட்டினார். வரலாறு எழுதப்படுவது தேசிய கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய மேலும் முயற்சிகள் தேவை என்று அவர் கூறினார்.


பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கொண்ட தலைமையின் கீழ் இந்தியா உலக அரங்கில் தனது கவுரவத்தையும், மரியாதையையும் மீண்டும் பெற்றுள்ளது என்றார். தற்போது, இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில் உலக விவகாரங்களில் முக்கிய குரலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றார் அவர். நிகழ்ச்சியில் அமித் ஷா, ஸ்கந்த விக்ரமாதித்யர் பற்றிய நூல் ஒன்றை வெளியிட்டார்.


Similar News