இளைஞர்களே இது விடுமுறை காலம் இல்லை கொண்டாட - குமரி மாவட்ட காவல்துறை.!

இளைஞர்களே இது விடுமுறை காலம் இல்லை கொண்டாட - குமரி மாவட்ட காவல்துறை.!

Update: 2020-04-12 04:23 GMT

குமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி ஒன்று கூடி சமைத்த இளைஞர்கள் அந்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர், இதற்கு குமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் ஒரு புறம் வீட்டில் முடங்கியிருந்தாலும், சிலர் விதிமுறைகளை மீறி வெளியே செல்வது, ஆறு, குளம், கடல்களில் குளிப்பது, ஒன்று கூடி பேசுவது என செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள் பலர் தடையுத்தரவை மீறி ஒன்று கூடி சமைத்து அங்கேயே சாப்பிட்டுள்ளனர். மேலும் அந்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் குமரி மாவட்ட காவல்துறைக்கும் சென்றது. உடனே காவல்துறையினர் அந்த படங்களை தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தடை நேரத்தில் இது போல் ஒன்று கூடுவது குற்றமாகும். தொடர்ந்த இது போல் நடந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.

குமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 167 பேர் கொரோனா நோய்த்தொற்று சந்தேக பட்டியலில் இருந்து சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.இதில் இதுவரை 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.148 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை. மீதமுள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. தனிமைப்படுத்துவது மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி. வீட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நிற்பதை கண்டால் 9566710110 என்ற எண்ணிற்கு ஜி.பி.எஸ் புகைப்படத்துடன் வாட்ஸ்சப் மூலம் புகார் அனுப்பி வைக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Similar News