தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Update: 2020-04-13 12:28 GMT

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை 15ஆம் தேதி காலை வரை நீட்டித்தது. இந்த நிலையில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட பல முதலமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் 11 தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும் உலக சுகாதார அமைப்பு, மருத்துவ நிபுணர் குழு, சுகாதார வல்லுனர்கள் பரிந்துரைகளின் படியும், நோய்தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு 11 தேதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும் ஊரடங்கை 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் எனவும் கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு செய்த அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1000 ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும், மேலும் பிற மாநில சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளும் தவறாமல் பின்பற்றி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News