அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாஜகவின் பேனர்களை வேலூரில் சேதப்படுத்திய மர்ம கும்பல் - தக்க நடவடிக்கை எடுக்க பாஜகவினர் கோரிக்கை!

யார் இந்த காரியத்தை செய்தது என்று தெரியவில்லை. வேலூர் பாஜகவினர் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

Update: 2024-01-28 16:45 GMT

வரும் எம்பி தேர்தலில், தமிழகத்தில் அதிக வாக்கு வங்கியை பெற்றாக வேண்டும் என்பதற்கான முழு முயற்சியை, பாஜக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தென்மாவட்டத்தில் காலூன்றுவதை போலவே, வடமாவட்டத்திலும் குறிப்பிட்ட வாக்கு சதவிதத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி வருகிறது அதனால்தான், வடமாவட்டங்களில் பலத்தை கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்த கையோடு, பாஜக உள்துறை செயலாளர் அமித்ஷாவே நேரடியாகவே, கடந்த வருடம் வேலூருக்கு வந்திருந்தார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டிருந்தார்.


அந்நிகழ்வில் பேசிய, மாநில தலைவர் அண்ணாமலை, "எம்பி தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியை வெல்வது மட்டுமே நம்முடைய ஒரே ஒரு இலக்காக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்றிலிருந்து காய்ச்சல் வந்துவிட்டது. அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்று தெரிந்ததுமே காய்ச்சல் தொடங்கிவிட்டது. அமித்ஷா வரும்போது விளக்குகளை வேண்டுமானால் ஆஃப் செய்யலாம். ஆனால், தொண்டர்களின் உற்சாகத்தை எப்போதும் ஆஃப் செய்ய முடியாது" என்று பேசியிருந்தார். இதற்கு பிறகு, வேலூர் தொகுதி குறிவைக்கப்பட்டு, பல்வேறு களப்பணிகள் நடந்து வருகின்றன.இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டத்திற்கு நடைபயணம் வரப்போகிறார்.


எனவே, அண்ணாமலையை வரவேற்று பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள், பேனர்களையும், போஸ்டர்களையும் வேலூர் முழுக்க ஒட்டி வருகிறார்கள். அதேபோல, வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வேலூர் அண்ணா சாலையில் ராஜா தியேட்டர் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை யாரோ சேதப்படுத்தியிருக்கிறார்கள்.. அதுபோலவே, காட்பாடி ரோட்டில் நேஷனல் சர்க்கிள் பகுதிகளில் இருந்த டிஜிட்டல் பேனர்களையும், போஸ்டர்களை சேதப்படுத்தி உள்ளனர். 


பாஜக டிஜிட்டல் பேனர்கள் காட்பாடி சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் வீசப்பட்டு கிடந்ததாம்.இதை பார்த்து பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் வேண்டுமென்றே மர்ம கும்பல் அதனை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்கள்.உடனடியாக இது தொடர்பாக தெற்கு போலீஸ் நிலையத்தில் பாஜகவினர் புகார் தந்துள்ளனர்.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பாஜக பேனர்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால், வேலூர் மாவட்ட பாஜகவில் பரபரப்பு நிலவுகிறது.


SOURCE :News 

Similar News