வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் புதிய பட்ஜெட்! ஒடிசாவில் பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் 68,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க இன்று இரண்டு நாள் பயணமாக ஒடிசா சென்றார். அதோடு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி பல கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது:
ஒடிசாவில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதிற்காக மனதார வாழ்த்துகிறேன். துணை பிரதமர், உள்துறை அமைச்சர், தகவல் துறை அமைச்சர் மற்றும் ஒளிபரப்பு என பல சகாப்தங்களாக நாட்டிற்கு சேவையாற்றும் பணியில் ஈடுபட்டு வந்த அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க நாடு முடிவு செய்துள்ளது. மேலும் தங்கள் வாழ்க்கையை மக்கள் சேவையில் அர்ப்பணித்தவர்களை இந்த நாடு ஒருபோதும் மறக்காது அதேபோன்று அத்வானி மக்கள் சேவையில் ஈடுபட்டதை நாடு என்றுமே மறப்பதில்லை! என முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நாட்டின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்கள் பல உள்ளது. நமது விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரின் வளர்ச்சியை முக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பட்ஜெட் அவர்களின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கிறது என்று பேசினார்.
Source : Dinamalar