பொங்கல் வேட்டி சேலை முறைகேடு குறித்து தமிழக பாஜக ஆதாரங்களுடன் புகார்! அண்ணாமலை அறிவிப்பு!
கடந்த ஜனவரி மாதத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு தரப்பில் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்ட வேட்டி சேலைகளில் பருத்திக்கு பதில் பாலிஸ்டர் நூலை அதிகம் பயன்படுத்தி உள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்ததோடு அந்த முறைகேட்டிற்கு ஆதாரத்தையும் பதிவிட்டிருந்தார் இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் புகார் அளிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் நடந்திருக்கிறது என்று, கைத்தறித் துறை அமைச்சர் திரு. காந்தி மீது குற்றச்சாட்டு வைத்திருந்தோம். அதற்கு அவர் 2003 ஆம் ஆண்டு அரசாணையை மேற்கோள் காட்டி, மக்களைத் தவறாகத் திசைதிருப்புகிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு அரசாணையின்படி, வேட்டியில் வெஃப்ட் பகுதி நெய்ய பாலியஸ்டர் நூலை பயன்படுத்தலாம். ஆனால், வார்ப் பகுதியை நெய்ய கடந்த ஆண்டு வரை 100% பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, வார்ப் பகுதி நெய்யவும், விலை குறைவான பாலியஸ்டர் நூலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே, அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார்ப் பகுதியை நெய்திருக்கிறார்கள். ஒரு வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் நாங்கள் சோதனை செய்ததும் வார்ப் பகுதியைத்தானே தவிர, வெஃப்ட் பகுதியை அல்ல. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் தமிழக பாஜக சார்பாக புகாரளிக்க உள்ளோம் என்று எக்ஸ் பக்கதில் தெரிவித்துள்ளார்.