ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கம்...

Update: 2024-03-29 16:36 GMT

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறினார். ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும் என்றும் இதற்காக பல புதிய நடைமுறைகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் தாங்கள் பயிற்சி பெறும் இடத்திலேயே வாக்களிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் 85 வயதைக் கடந்தவர்களும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டிருப்பதையடுத்து சுமார் நான்கு லட்சம் பேர் அதற்கான படிவத்தை ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.


ராணுவத்தில் பணியாற்றுவோர் தபால் வாக்கு அளிப்பதில் இருந்த சிரமங்கள் நீக்கப்பட்டு தற்போது இடிபிபிஎஸ் எனும் மின்னணு மூலம் பரிமாற்றம் செய்யும் வாக்களிப்பு முறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ரயில்வே துறை மற்றும் ஊடகங்களில் பணியாற்றுவோரும், தபால் வாக்கு முறையை பயன்படுத்தலாம் என்ற அளவிற்கு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப் படுகின்றன என்று குறிப்பிட்ட தலைமைத் தேர்தல் அதிகாரி ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கமே இதற்குக் காரணம் என்றார்.


மக்கள் ஓரிடத்தில் கூடி ஜனநாயகக் கடமையாற்றும் இடமாக வாக்குச் சாவடிகள் இருப்பதால் இங்கு நிழல் தரும் பந்தல்கள், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, உதவியாளர் போன்ற வசதிகள் செய்து தரப்படுவதாகவும் சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News