திமுக ஆட்சியில் தமிழகம் எங்கும் சந்தி சரிக்கும் சட்டம் ஒழுங்கு : திமுக ஆட்சியை கலைக்கக்கோரும் பொதுமக்கள்

Update: 2024-07-09 14:19 GMT

தொடர்ந்து இரண்டு ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்ட ஒழுங்கை நிமிர்த்தி விடுவோம் என்று பல வீர வசனங்களை பேசி 2021 ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அன்றிலிருந்து தமிழகத்தில் உள்ள அராஜகம், வன்முறை, ரவுடிகளின் நடவடிக்கை பொதுவெளிகளில் பட்ட பகலிலே, அதிகமாக நடக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு கடந்த வருடத்திலும், இந்த வருடத்திலும் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் முக்கிய உதாரணமாகும். அதேபோன்று கஞ்சா, போதைப் பொருள்களின் கடத்தல் மற்றும் இன்றைய தமிழக இளைஞர்கள் மத்தியில் அவை அதிகமாக புழக்கத்தில் இருப்பதும், இவை அனைத்திற்கும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பது போன்ற மௌனத்தை தொடர்ந்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது. 


மேலும் சமீபத்தில் பி.எஸ்.பி கட்சியின் மாநில தலைவர் சென்னையில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அறிவாளால் வெட்டப்பட்டார். அதுவும் இந்த சம்பவம் 2023 இல் நடந்த ஒரு கொலைக்கான பழிவாங்கல் என்ற செய்தியும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகியான சிவசங்கர் மீது நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் அரிவாளால் தாக்கியதும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான ஷண்முகத்தின் மீதும் மர்ம கும்பல் வெட்டி கொலை வெறி தாக்குதல் செய்ததும், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு நடந்த தொடர் வெட்டுக்கொலை சம்பவங்கள் ஆகும்.


இப்படி தமிழகத்தில் திமுக தனது ஆட்சியை நிறுவியதிலிருந்து ரவுடிகளின் அராஜகம் மற்றும் ஆளுமைகள் அதிகரிக்க ஆரம்பித்ததோடு மட்டுமின்றி, எந்தவித பயமும் இன்றி பட்டப்பகலிலே நடுரோட்டில் வைத்து தங்களது அராஜகத்தை புரிகிறார்கள். இவற்றை தட்டி கேட்பதற்கு காவல்துறையும் முன் வருவதில்லை, அரசியல் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கே இந்த ஒரு நிலைமை ஏற்பட்டால் சாதாரண மக்கள் எங்கு செல்வார்கள் என்று சமூக வலைதளங்களில் சட்ட ஒழுங்கு தன் கையில் வைத்துள்ள தமிழக முதல்வருக்கு கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் திமுக அமைச்சரான ஐ.பெரியசாமி தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலமே சமூக நீதி மற்றும் சட்ட ஒழுங்கை காப்போம் என்று திமுக கூறுவது அனைத்தும் வாக்குக்காக மட்டும்தான் என்பது புலப்படுகிறது. 


இந்த நிலையில் தேனி ஜி.கல்லுப்பட்டியில், இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட செல்வம் என்பவரை மர்ம நபர்கள் சுத்து போட்டு பட்ட பகலில் ஒரு கடைக்குள் புகுந்து வெட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இது போன்ற பல வெட்டு சம்பவங்கள் மற்றும் கொலை வெறி தாக்குதல்கள் இந்த பகுதிகளில் அதிகமாக நடக்கிறது. ஆனால் காவல்துறையும், தமிழக அரசும் இதனை ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை! அதுவும் இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்து இதுபோன்று வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று இதில் பாதிக்கப்பட்டவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த தாக்குதலானது இதற்கு முன்பாக நடந்த கொலைக்கு பழிவாங்கும் தாக்குதல் என்றும் கூறப்படுகிறது. இப்படியே சினிமா பாணியில் ஒவ்வொருவரும் கையில் அரிவாளை தூக்கிக்கொண்டு பழிக்குப் பழி வாங்க போகிறேன் என பட்டப் பகலில் அராஜகத்தை மேற்கொண்டால் தமிழகத்தில் சாதாரண மக்கள் வாழ கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் என மக்கள் தரப்பில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு மீது அதிருப்திகள் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படிப்பட்ட சட்ட ஒழுங்கு சீர்கேட்டான ஆட்சியை திமுக கொடுப்பதற்கு பதில் தனது ஆட்சியை கலைத்து விட்டு செல்லலாம் என்றும் பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News