வசூலை மட்டும் செய்த இந்து சமய அறநிலையத்துறை, விட்டு விளாசிய உயர் நீதிமன்ற மதுரை கிளை!
திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை, குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாக விமர்சித்துள்ளது.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் குருக்கள் மற்றும் அலுவல் பணியிடங்களை நிரப்பக் கோரி பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கோவிலில் 12 குருக்கள்களும் 19 உதவி குருக்கள்களும் பணியமர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இரண்டு குருக்கள்கள் மற்றும் ஏழு உதவி குருக்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். ஆனால் ரூபாய் 90 கோடிக்கும் அதிகமான வருமானம் இந்த கோவில் மூலம் கிடைக்கிறது. ராமநாத சுவாமி கோவில் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே பார்க்கும் இந்து சமய அறநிலையத்துறை கோவிலில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு வந்த நிலையில், கோயில் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு? கோவிலின் வருமான தொகை எவ்வாறு செலவு செய்யப்படுகிறது? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்.
அதோடு இந்து சமய அறநிலையத்துறை கோவில் வருமானத்தை மட்டும் பார்த்துவிட்டு கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து, ராமநாதசுவாமி கோவிலின் செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு அக்டோபர் 14ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
Source : Commune