மத்திய அரசின் தொழிற்பயிற்சியால் பயனடைந்த தமிழகம்!
கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலமாக தமிழகத்தில் 29 ஆயிரம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள இளைஞர்கள் இளம் பெண்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் கிராமப்புற சுய பயிற்சி நிறுவனங்களை மத்திய அரசின் கிராம மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது. நாடு முழுவதும் மாவட்ட அளவில் இந்த மையத்தை மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு முன்னணி வங்கிகள் நிர்வகித்து வருகின்றன .இந்த நிறுவனங்கள் பல்வேறு பயிற்சிகளை அளித்து இளைஞர்களை சுயதொழில் தொடங்க ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் சிறு தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது .
கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக கடந்த 2023-24 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 4,51,419 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கிராம மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக அதிகம் பயிற்சி பெற்ற மாநிலங்கள் பட்டியலில் 60 ஆயிரத்து 513 பேருடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
29 ஆயிரத்து 73 பேர் பயிற்சி பெற்று தமிழகம் ஆறாவது இடத்தை அலங்கரிக்கிறது .தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 25,613 பேரும் புதுச்சேரியில் 911 பேரும் தொழில் பயிற்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொருத்தமட்டில் கடந்த 2021 22 ஆம் ஆண்டு 17,187 பேருக்கு 2022-23 ஆம் ஆண்டில் 26 ஆயிரத்து 310 பேருக்கு தொழிற்பயிற்சி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.