டெல்லியில் 'வளர்ந்த இந்தியா' லட்சியத்துக்கு ஏற்ப வேகம் எடுக்க இருக்கும் பாஜக- நிர்மலா சீதாராமன்!
டெல்லியில் அமையும் பாஜக அரசு வளர்ந்த இந்தியா லட்சியத்துக்கு ஏற்ப தலைநகரை மாற்றும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.;

தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின் தலைநகரில் அந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறது. இது பாஜகவினரிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியைப் பார்த்து பா.ஜனதா நிர்வாகிகளும் தொண்டர்களும் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :-
உண்மையில் இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆட்சி அமைய நாங்கள் ஆர்வமாக இருந்தோம். மேலும் 2047க்குள் வளர்ந்த பாரதம் என்ற கனவை அடைய இது தேவையாகவும் இருந்தது. இந்தியாவின் தேசிய தலைநகரில் மக்களின் நலனுக்காக சேவை செய்யும் அரசு இருக்க வேண்டும். நாட்டுக்காக பிரதமர் வகுத்துள்ள செயல் திட்டம் நிச்சயமாக டெல்லியை முதன்மையானதாக எடுத்துச் செல்வதுடன் ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு சேவை செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
குறிப்பாக மனித வள குறியீடு சார்ந்த விவகாரங்கள், அடிப்படை உள்கட்டமைப்பு, பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மக்களின் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் வளர்ந்த பாரதத்தின் விருப்பங்களை நிறைவேற்றும். அந்த வகையில் டெல்லியில் அமையும் பாஜக அரசு வளர்ந்த இந்திய லட்சியத்துக்கு ஏற்ப தலைநகரை மாற்றும் இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். பின்னர் அவர் தனது எக்ஸ் தளத்தில் 'பாஜக மீது நம்பிக்கை வைத்த டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் நட்டாஜி தலைமையில் டெல்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற நாங்கள் எங்களை அர்ப்பணிக்கிறோம்.