இந்திய இரயில்வே துறையில் புதிய வரலாற்றை எழுத இருக்கும் மோடி அரசு: ஏன் தெரியுமா?

இந்திய ரெயில்வே ரூ.20.89 கோடி செலவில் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, சென்னை ஐ.ஐ.டி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது. ஹைப்பர்லூப் என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும். இது வளர்ச்சியின் தொடக்க கட்டத்தில் உள்ளது. ஹைப்பர்லூப்பின் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அளவுருக்கள் இன்னும் உலகளவில் வடிவமைக்கப்படவில்லை. ஹைப்பர்லூப் மற்ற போக்குவரத்து முறைகளை விட விரைவாகவும், அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு ரூ.20.89 கோடி நிதியுதவியுடன் இந்த தொழில்நுட்பம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக ஹைப்பர்லூப் தொழில் நுட்பத்திற்கான சிறப்பு மையத்தை அமைப்பதற்காக சென்னை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.