1000 ஆண்டுகள் பழமையான நாணயம்-திருச்சியில் ஆச்சரியம்!
இந்த நாணயங்கள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி பிரிவிடம் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து நாணயங்கள் திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் கிடைத்துள்ளன. மண்ணச்சநல்லூர் பகுதியில் கிராமத்தில் விவசாய நிலத்தை உழுத போது இவை கிடைத்துள்ளன. ராஜேந்திர சோழனின் அவதார தினமான ஆடித் திருவாதிரை அன்று இந்த நாணயங்கள் கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணச்சநல்லூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழகநல்லூர் என்ற கிராமத்தில் விவசாயிகள் நிலத்தை உழுது கொண்டிருந்த போது இந்த நாணயங்கள் கிடைத்துள்ளன. செம்பால் ஆன இந்த நாணயங்களின் ஒரு புறத்தில் முதலாம் ராஜராஜன் நின்று கொண்டிருப்பது போன்ற அமைப்புடன் ஒரு விளக்கும் மற்றொரு புறத்தில் ராஜராஜ சோழன் அரச மரபு என்ற அமர்ந்த நிலையில் இருப்பது போன்று பொறிக்கப்பட்டுள்ளது.
2.5 செமீ விட்டம் கொண்ட இந்த நாணயங்கள் 5 கிராமை விட குறைவான எடை கொண்டதாக இருப்பதாகவும் தனது தந்தையின் நினைவாக முதலாம் ராஜேந்திர சோழன் இந்த நாணயங்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாணயங்கள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி பிரிவிடம் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.
சோழர்கள் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததால் இந்த பகுதியில் வியாபாரம் செழித்து இருந்திருக்கும் என்றும் மண்ணச்சநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்று மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Source : TOI