வீடியோ கால் மூலம் டாக்டரிடம் பேசி பிரசவம் பார்த்த நர்சுகள்- பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே இறந்த கொடூரம்
மதுராந்தகம் அருகே அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் வீடியோ கால் மூலம் பேசி நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது. உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி புஷ்பா நிறை மத கர்ப்பிணி .நேற்று முன்தினம் புஷ்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மதுராந்தகம் அருகே உள்ள இல்லீடு அரசுஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பணியில் டாக்டர் இல்லை .அவர் ஒரு மருத்துவ முகாமுக்கு சென்று விட்டார்.
புஷ்பா பிரசவ வலியால் துடித்ததையடுத்து அங்கு பணியில் இருந்த நர்சுகள் டாக்டர் இன்றி பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். உடனே அவர்கள் மற்றொரு ஆரம்ப ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த ஒரு டாக்டரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் அவர் வீடியோகாலில் பேசியபடி ஆலோசனை கூறினார். அதன்படி நர்சுகள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது குழந்தையின் கால் பகுதி வெளியே வரவே நர்சுகள் திகைத்துப் போனார்கள். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் புஷ்பாவை மேல் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்ஸில் செல்லும் வழியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. டாக்டர் இல்லாமல் நர்சுகள் வீடியோ காலில் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. ஆத்திரமடைந்த புஷ்பாவின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நேற்று காலை சூனாமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக மதுராந்தகம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.