டெல்லி - மும்பை இடையே ஒரு லட்சம் கோடியில் அதிவிரைவுச் சாலை- பிரதமர் மோடியின் கனவுத்திட்டம்
நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக அமைவது உள்கட்டமைப்பு வசதிகள் தான். அதனால்தான் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் அதிவிரைவுச்சாலையானது நாட்டின் தலைநகரான டெல்லியையும் பொருளாதார தலைநகரான மும்பையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாலை அமைப்பதற்கான பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் கோடி. பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இந்த அதிவிரைவுச் சாலையில் அப்படி என்னதான் சிறப்பு என்கிறீர்களா? இது டெல்லி மும்பை மாநகரங்களுக்கு இடையேயான 1386 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்போகும் இந்த சாலைதான் இந்தியாவின் மிக நீளமான அதிவிரைவுச் சாலை என்ற பெயரைப் பெறும். இந்த அதிவிரைவுச் சாலை டெல்லி, அரியானா , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய ஆறு மாநிலங்கள் மற்றும் கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர் , போபால் வதோதரா, சூரத் இடையே செல்லும்.
இந்த சாலைக்காக டெல்லி ,அரியானா, ராஜஸ்தான் , குஜராத் மராட்டிய மாநிலங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு சந்தை விலையை விட ஒன்றரை மடங்கு விலை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் திட்டமிடப்பட்டுள்ளது . மழைநீர் சேகரிப்புக்கு 500 மீட்டர் இடைவெளிகளுக்கு இடையே வசதி செய்யப்படுகிறது . இந்த அதிவிரைவுச்சாலை டெல்லி - மும்பை இடையில் ஆன சாலை வழியிலான தொலைவை 12 சதவீதம் குறைக்கும். பயண நேரத்தை பொருத்தமட்டில் சரி பாதியாக குறைத்து விடும். அதாவது டெல்லி மும்பை இடையேயான தற்போதைய பயண நேரம் 24 மணி நேரம் ஆகும். இதை அந்த அதிவிரைவுச்சாலை 12 மணி நேரமாக குறைத்துவிடும்.
டெல்லி மும்பை அதிவிரைவுச்சாலை சாலை பயண தொலைவையும் நேரத்தையும் பெருமளவில் குறைப்பதும் பலனாக ஆண்டுக்கு 32 கோடி லிட்டர் எரிபொருளை சேமிக்க முடியும் . 85 கோடி கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடு உமிழ்தல் தவிர்க்கப்படும். இந்த பிரம்மாண்ட சாலையின் ஒரு பகுதி அமைக்கப்பட்டு விட்டது. அதாவது 246 கிலோ மீட்டர் தொலைவிற்கு டெல்லி ஹரியானாவின் சோனா-ராஜஸ்தானின் தவ்சாயிடையே ரூபாய் 12,150 கோடியில் ஒரு பிரிவு அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பிரிவு டெல்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையேயான பயண நேரத்தை ஐந்து மணி நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரமாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிவிரைவுச் சாலையின் பிரிவை தான் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.