கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தற்கொலை

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பட்டதாரி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-20 09:30 GMT

கோவை அருகே வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். தொழிலாளி. இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.


இவர்களுடைய மகன் மதன்குமார். இவர் பி.எஸ்.சி படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டிலிருந்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நாளடைவில் மதன்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தியதால் மதன்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் கண்பார்வை மங்கி பார்வை குறைபாட்டில் அவதிப்பட்டு வந்தார்.


தலைவலி கண் பார்வை மங்கியதால் மதன்குமார் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் ஆன்லைன் விளையாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டதை நினைத்து வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததாலும் , சரியான வேலை கிடைக்காததாலும்,  வாலிப வயதிலேயே கண் பார்வை மங்கியதாலும் , வாழ்க்கையில் விரக்தி அடைந்த மதன்குமார் வீட்டினுள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 


Similar News