70 ஏக்கரை ஆக்கிரமிப்பு.. கோவில் இடிப்பு.. தனியார் விவசாயக் கல்லூரி மீது பகீர் குற்றச்சாட்டு.!

70 ஏக்கரை ஆக்கிரமிப்பு.. கோவில் இடிப்பு.. தனியார் விவசாயக் கல்லூரி மீது பகீர் குற்றச்சாட்டு.!

Update: 2020-11-20 10:45 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பழமையான சிவன் கோவில் மற்றும் அதற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் விவசாய கல்லூரிக் கட்டிடங்களை வருவாய்த்துறையினர் இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர்.

உசிலம்பட்டி அருகே ஸ்ரீரங்காபுரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி சின்ன மகாலிங்கம் கோவில் அமைந்திருந்தது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த கோவிலில் ஒன்றுகூடி வழிபட்டு வந்துள்ளனர்.

வருடா வருடம் கிராம மக்கள் கோவிலில் திருவிழா எடுத்து வந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவுக்காக கோவிலுக்கு சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள தனியார் விவசாய கல்லூரி நிர்வாகத்தினர் பொதுமக்களை கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் யாரும் கோவில் பக்கம் செல்லாததால் அதை பயன்படுத்திக் கொண்டு இந்த பழமையான சிவன் கோவிலை கல்லூரி நிர்வாகத்தினர் இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக கிராமத்தினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இதையடுத்து கோவிலையும் கோவில் நிலங்களையும் ஆக்கிரமித்த கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். எனினும் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்து கடந்த மாதம் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளவிடும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். அளவீட்டுக்கு பின் நடந்த ஆய்வில் கல்லூரி நிர்வாகத்தினர் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எழுபது ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கல்லூரி அமைந்துள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் உதவியுடன் உடனடியாக ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். முதற்கட்டமாக 20 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள ஆக்கிரமிப்புகளையும் அளவிட்டு விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Similar News