வார்த்தைக்காக காத்திருந்தவர் அல்ல கண்ணதாசன், தமிழே அவருக்காக காத்திருந்தது.!

பகுதி - 2

Update: 2020-04-18 02:16 GMT

இவருடைய பாடல்கள் அன்பையும் பேசும், அஞ்சாமையும் பேசும், அதனூடே மெல்லிய வருடல் போல் ஆன்மீகச்சாரலும் வீசும். இறைவனுக்கே கேள்விகள் எழுப்பும், அப்பாடலின் சரணத்திலே சரணாகதியும் நிகழும் இவையெல்லாம் கண்ணாதனின் படைப்புகளிலில் மட்டுமே நிகழும் மாயங்கள்.

காதலின்றி கவிஞரின் வாழ்வும் சரி, அவர் குறித்த கட்டுரைகளும் சரி நிச்சயம் முழுமை பெறாது. ஆயிரமாயிரம் உவமைகள், ஏராளமான கற்பனைகள், காதலில் தோய்ந்த வரிகள் எடுத்து சொல்ல ஏராளம் உண்டு ஆனால் இதிலிருக்கும் ஓர் சுவாரஸ்யமே, கண்களற்ற நாயகன் காதலியை வர்ணிக்கும் சூழலில் கவியரசர் கையாண்ட உவமைகள், புனைவிலக்கியத்தில் தொலைவதற்கான ஆரம்ப புள்ளி.

ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது

பார்வையற்றவனுக்கு கூந்தல் மேகத்தின் நிறம் என தெரியாமல் இருக்கலாம் ஆனால் மேகத்தின் தன்மை குளிர்மையானது என அறிந்தவனாய் இருப்பான். செவிகள் இரண்டும் கேள்வியானது என கேள்வி குறியோடு செவியின் வடிவை ஒப்பிடும் இடம் கவிதை இரசிகர்களை சிலிர்ப்பில் ஆழ்த்தும் தீஞ்சுவையேறிய கற்புனைச்சுளை.

வார்த்தைகளை தேடிச்சென்றவர் அல்ல கண்ணதாசன், வார்த்தை என்னை கொய்ய மாட்டாரோ என அவர் சிந்தனை வனத்தில் ஏங்கி கிடந்த மலர்களாகவே நான் உருவகம் செய்கிறேன்.

உதாரணமாக,

"காற்று வந்தால் தலை சாயும்…

நாணல்

காதல் வந்தால் தலை சாயும்

நாணம் "

என்ற வரிகளெல்லாம் இன்றைய நவீன இளைஞர் மொழியில் சொன்னால் "வேற லெவல் " சார்.

"இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?"

இது நடிகர் திலகத்திற்காக கவியரசர் எழுதிய வரிகள்... அவர் வார்த்தைகளை கடன் வாங்கி அவரை புகழ்வது ஒரு சுகமே... கவிஞரின் எந்த பரிமாணத்தை வியப்பது. கெலிடோஸ்கோப்பின் சிறிய துளை வழியே சிதறி கிடக்கும் சிறு கண்ணாடி துண்டுகளின் ஒவிய பரிமாணத்தை கண்டு வியக்கும் சிறுமியை போலே.... கவிஞரை கண்டு வியந்து நிற்கிறேன்.

வாழ்வின் சவால்களை தனக்கு கிடைத்த கவிதை வரத்தாலே மொழிபெயர்த்த தன்மை, தன் அனுபவங்களை கடைபரப்பி பாசாங்கு ஏதுமின்றி பகிரங்கமாய் பகிர்ந்துகொண்ட துணிவு. தோல்விகளை துவழ்ச்சியின் துவக்கமாக ஏற்காமல் அடுத்த தளம் நோக்கி நகர்வதற்க்கான உந்துதலாக ஏற்ற விதம் என கவிஞரின் ஒவ்வொறு அசைவும் ஆச்சர்யமூட்டும் ஆதர்ஷ பாடங்கள்.

இத்தனை திருப்பங்களும், இத்தனை புகழும், இத்தனை உயரமும், இத்தனை சருக்கல்களும் இன்னும் பல "இத்தனைகளும்" நாம் வாழும் சமகாலத்தில் வேறு எவர் வாழ்வில் நிகழ்திருக்கும் சாத்தியங்கள் குறைவே. அவரின் பாடல்களின் லயம் இன்னும் குறையவில்லை. கடையிதழ் ஒதுக்கி லேசாக புன்னைக்கிற அந்த நுட்ப புன்னகை.... வெற்றியை வசப்படுத்தியவனுக்கு மட்டுமே வாய்க்கும். சாதனைகளையும் வெற்றிகளையும் துரத்தி ஓய்ந்த அனுபவங்கள் அவருக்கு இல்லை.... வெற்றிகள் தாமாகவே அவர் வசம் பணிந்தது... உற்சாகம் அவர் வாழ்விலும் படைப்பிலும் இயல்பாகவே கனிந்தது.

அவரின் படைப்புகள் இலக்கியத்தின் மைல்கல் எனில்... அவர் வாழ்க்கை வென்றிட துடிக்கிற எவருக்கும் ஒரு அடிக்கல்.  

Similar News