கூடலழகர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடி! பக்தர்கள் புகார்!

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பாதையை தற்போது தி.மு.க, அ.தி.மு.க. மற்றும் த.மா.க கட்சிகள் ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2021-02-25 08:07 GMT

மதுரையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிறுவப்பட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான கூடல் அழகர் பெருமாள் கோவில் நான்கு கால் மண்டபத்தை ஒட்டி கோவிலுக்கு செல்லும் பொதுப் பாதை ஒன்று உள்ளது. இங்குள்ள நான்கு கால் மண்டபத்தில் பூ கட்டும் பணியில் அங்குள்ள பூ வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பாதையை தற்போது தி.மு.க, அ.தி.மு.க. மற்றும் த.மா.க கட்சிகள் ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இங்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்துடன் கூடிய கொடிக் கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடமும் மாநகராட்சியிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தலுக்கு முன் இந்த கொடி கம்பங்களை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளாக இருந்தாலும் கோவில் இடத்தில் கூட்டணி வைத்துக் கொண்டு ஆக்கிரமித்து கொடிக் கம்பம் அமைத்துள்ள சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் கோவில் சொத்துக்களை அபகரிப்பதையும் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும் என்றால் கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதே ஒரே வழி என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Similar News