எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் நேர்மறையான மனநிலையுடன் அணுகும் பிரதமர் மோடி!- நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றி கூறியது என்ன?

தேர்தல் தோல்வி விரக்தியை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டாம் என்று எதிர் கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-12-05 04:45 GMT

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


எதிர்மறை தன்மையை நாடு நிராகரித்துவிட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் எப்போதும் எதிர்க்கட்சி நண்பர்களுடன் பேசுகிறோம். எப்போதும் அவர்களது ஒத்துழைப்பை கேட்கிறோம். இந்த முறையும் அந்த நடைமுறைகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந்த ஜனநாயக கோவில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தவும் ஒரு முக்கியமான தளமாகும்.


எனவே அனைத்து உறுப்பினர்களும் சிறந்த தயாரிப்புடன் வருகை தந்து மசோதாக்கள் மீது முழுமையான விவாதத்தில் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் சிறந்த பரிந்துரைகள் கிடைக்கும். ஆனால் இந்த விவாதங்கள் நடைபெறாமல் இருந்தால் நாடு அவற்றை தவறவிடும். சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நான் கூற வேண்டும் என்றால் நமது எதிர்க்கட்சி நண்பர்களுக்கு இந்த தொடர் ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும்.


தேர்தல் தோல்வி விரக்தியுடன் திட்டங்கள் வகுப்பதை விட்டுவிட்டு அவர்கள் தங்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளாக கொண்டிருக்கும் எதிர்மறை தன்மையை பின்னுக்கு தள்ள வேண்டும். இந்த தொடரில் நேர்மறை தன்மையுடன் அவர்கள் முன்னோக்கி வந்தால் நாடு அவர்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்துக்களை மாற்றிவிடும். எதிர்கட்சிகளுக்கு ஒரு புதிய வழி பிறக்கும்.


அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நான் இன்னும் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குகிறேன். நேர்மறை மனநிலையுடன் முன்னோக்கி வாருங்கள். ஒவ்வொருவரின் எதிர்காலமும் பிரகாசமாக உள்ளது. நம்பிக்கையே இழக்க வேண்டிய தேவை இல்லை.ஆனால் தயவு செய்து தேர்தல் தோல்வி விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் வெளிப்படுத்த வேண்டாம் .இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News