காங்கிரசுக்கு குடும்பம் தான் கட்சி ஆனால் பா.ஜ.க.வில் கட்சி தான் குடும்பம் – பிரதமர் மோடி

காங்கிரசுக்கு குடும்பம் தான் கட்சி ஆனால் பா.ஜ.க.வில் கட்சி தான் குடும்பம் – பிரதமர் மோடி

Update: 2019-01-23 18:43 GMT




பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஆதரித்து அரைகுறை மனதுடன் பாராளுமன்றத்தில் வாக்களித்த சிலர் தற்போது நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளதாக மோடி குற்றம்சாட்டினார்.


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேசம் மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி இன்று நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்த மோடி, பிரியங்காவுக்கு பதவி அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பா.ஜ.க.வில் எப்போதுமே உள்கட்சி ஜனநாயகம் மதிக்கப்படுவதாக தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளில் குடும்பம்தான் கட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பா.ஜ.க.வில் மட்டும் தான் கட்சியே ஒரு குடும்பமாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து விடுபட்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று நான் கூறிவருவது காங்கிரஸ் கட்சியில் உள்ள வாரிசு அரசியலையும் சேர்த்துத்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


பா.ஜ.க.வின் ரத்தநாளங்களில் ஜனநாயகத்தின் மதிப்புமிக்க கலாச்சாரம் ஊறியிருப்பதாக குறிப்பிட்ட மோடி, எந்தவொரு தனிநபரோ அல்லது குடும்பத்தினரோ நினைப்பதை நம் கட்சியில் சாதித்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சமாஜ்வாடி-பகுஜன்சமாஜ் கட்சிகள் மெகா கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது. இதனையடுத்து காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா, ராகுல் காந்தி தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது என கூறியுள்ளது.





Similar News