வாழ்க்கை அச்சுறுத்தலிலிருந்து முஸ்லிம் பெண்கள் விடுபட முத்தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் - பா.ஜ.க மகளிர் மாநாட்டில் பிரதமர் உறுதி

வாழ்க்கை அச்சுறுத்தலிலிருந்து முஸ்லிம் பெண்கள் விடுபட முத்தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் - பா.ஜ.க மகளிர் மாநாட்டில் பிரதமர் உறுதி

Update: 2018-12-23 06:09 GMT
எல்லா தடைகளையும் தாண்டி முத்தலாக் தடைச்சட்டத்தை நிறைவேற்ற அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறிய போதும், மாநிலங்களவையில் எதிர்க் கட்சியினரின்  எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் தடுக்கப்பட்டது. இச் சட்டத்திருத்தத்தின் படி மூன்று முறை தலாக்கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். முத்தலாக்  தொடர்பாக கடந்த செப்டம்பரில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை சட்டமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா தேசிய மகளிர் மகளிர் அணியினரின் 5-வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடந்தது.
இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் அவர்கள்  முஸ்லீம் பெண்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக விளக்கம் அளித்தார். இச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல்  எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக குறிப்பிட்ட மோடி, அனைத்துத் தடைகளையும் தாண்டி நிச்சயம் இச்சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார். இதன்மூலம் முஸ்லிம் பெண்கள் மிகப்பெரிய  வாழ்க்கை அச்சுறுத்தலில் இருந்து விடுபட முடியும் என்றார். மேலும் முஸ்லீம் பெண்கள் ஆண் துணை இல்லாமல் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளலாம் என்று சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தில் 75 சதவீத வீட்டு உரிமையாளர்கள் பெண்கள் தான். 18 கோடி வங்கி கணக்குகள் பெண்களுக்குரியது. ஆண்-பெண் பாலின விகிதாச்சாரமும் அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் துறை  மந்திரிகள் குழுவில் முதல்முறையாக 2 பெண்கள் இணைந்துள்ளனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் சமூகத்தின் பார்வை பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கு நல்ல மாற்றத்தை நோக்கி செல்கிறது.  முதல்முறையாக அரசின் முக்கிய திட்டங்கள் பெண்களை சார்ந்தே உள்ளது. உதாரணமாக தூய்மை இந்தியா திட்டம், இலவச எரிவாயு திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் போன்றவை பெரும்பாலும்  பெண்களுக்கானதாகவே உள்ளது என்றார்.
விமானப்படையில் போர் விமான பைலட்டுகளாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடற்படையிலும் பெண் அதிகாரிகள் பிரிவு உள்ளது. கடத்தல் தடுப்பு சட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு  அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. கடந்த 60, 70 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, இப்போது நாட்டு மக்கள் பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் முந்தைய அரசுகள் பெண்களுக்கு  அடிப்படை வசதிகள் உள்பட எதுவும் செய்யவில்லை. அவர்கள் வாக்குறுதி மட்டுமே கொடுத்தனர். 60, 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க தவறிவிட்டனர். சமூக  சீர்திருத்தம் மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஆகியவற்றுக்காக முந்தைய அரசுகள் உரிய நேரத்துக்காக காத்துக்கொண்டு இருந்தன என்றும் கூறினார்.

Similar News