புதிய தேர்தல் கமிஷனர்களாக பிரதமர் மோடி தலைமையிலான குழு தேர்வு செய்த இருவர்- ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து!

புதிய தேர்தல் கமிஷ்னர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிரர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-15 11:05 GMT

தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்களை உறுப்பினர்களாக கொண்டது இந்திய தேர்தல் கமிஷன். இதில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப்சந்திர பாண்டியன் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனர் அருண் கோயல் கடந்த ஒன்பதாம் தேதி ராஜினாமா செய்தார் .இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார்.


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காலியாக இருக்கும் தேர்தல் கமிஷனர் பதவிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. எனவே தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி புதிய தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. புதிய தேர்தல் கமிஷனர் பதவிக்காக 212 பேர் கொண்ட பட்டியலை சட்டமந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் ஆன தேர்வு குழு தயாரித்திருந்தது. இதிலிருந்து உட்பல் குமார் சிங் ,பிரதீப் குமார் திரிபாதி, ஞானேஷ் குமார்,  இந்தேவர் பாண்டே, சுக்பீர் சிங் சாந்து, சுதீர் குமார், கங்காதர் ரகாட்டே ஆகிய ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர் .


இவர்கள் அனைவரும் முன்னாள் அதிகாரிகள் ஆவார். பொதுவாக தேர்தல் கமிஷனர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழு தேர்வு செய்யும். ஆனால் தற்போது இந்த குழுவில் பிரதமர் , மத்திய மந்திரி ஒருவர் மற்றும் மக்களவையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உறுப்பினராக நியமித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டப்படி உருவாக்கப்பட்ட தேர்வு குழு முதல் முறையாக நேற்று கூடியது.


பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரை கொண்ட குழு நேற்று பகலில் கூடியது .இவர்களுடன் தேர்வு குழு தலைவர் மத்திய சட்டமந்திரி அர்ஜுன் ராம் மெக்வாலும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகிய இருவரையும் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு குழுவினர் தேர்வு செய்தனர். பின்னர் இருவரையும் தேர்வுகள் கமிஷனர்களாக நியமிக்குமாறு பரிந்துரைத்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதைப் பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகிய இருவரையும் புதிய தேர்தல் கமிஷனர்களாக முறைப்படி நியமனம் செய்தார். இது குறித்து அறிவிப்பை சட்ட அமைச்சகம் மாலையில் வெளியிட்டது.


SOURCE :DAILY THANTHI



Similar News