உள்நாட்டுப் பிரச்சனைகளை திசை திருப்ப அண்டை நாடுகளை வம்பிழுக்கிறதா சீனா? #Replug

உள்நாட்டுப் பிரச்சனைகளை திசை திருப்ப அண்டை நாடுகளை வம்பிழுக்கிறதா சீனா? #Replug

Update: 2020-06-19 02:16 GMT

சீனாவில் பெயருக்கு இருக்கும் பாராளுமன்றத்தில் மேல் மற்றும் கீழவைகள் வருடத்திற்கு ஒரு முறை கூடும் Two Sessions என்ற கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்றது. மற்ற நாடுகளில் பாராளுமன்றங்களில் பிரதிநிதிகள் அடிக்கடி சந்திப்பது போல் அல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த கூட்டங்களின் முக்கியமான அம்சம் அந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி இலக்கு தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் நிகழ்வு. சீன அரசும் சரி, மக்களும் சரி, ஜிடிபி வளர்ச்சி இலக்கை மிக முக்கியமானதாக எண்ணுவது குறிப்பிடத்தக்கது.

ஜிடிபி வளர்ச்சி இலக்கை எட்டுவது ‌கம்யூனிஸ்ட் அரசின் செயல்திறனைக் காட்டும் அலகாக கருதப்படுவதால் அதை அடைய கடும் அழுத்தத்தை அரசு சந்திக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த இலக்கு பாராளுமன்ற கூட்டத்தில் இந்த முறை அறிவிக்கப்படவில்லை. இதற்கு தற்போதைய சூழ்நிலையில் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பதால், வளர்ச்சி இலக்கை எட்ட முடியாமல் போகும் பட்சத்தில் அது கம்யூனிஸ்ட் அரசுக்கு அவமானமாகிவிடும் என்பது காரணமாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. மே மாதத்திற்கான ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்கள் கிடைத்ததும் சீன அரசின் பயம் உண்மையானது போல் தெரிகிறது. ஏற்றுமதியும்‌ குறைந்து, கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு இறக்குமதியும் குன்றிப் போயுள்ளது. உள்நாட்டுத் தேவை குறைந்ததால் கிட்டத்தட்ட 16.7 சதவீதம் அளவுக்கு இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், கம்யூனிஸ்ட் சீன அரசின் முக்கியமான பிரச்சினை ஏற்றுமதியில் 3.3 சதவீதம் சரிந்ததே ஆகும்.

இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக இறக்குமதி குறைந்தால் அது ஏற்கனவே 3.1 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் அந்நிய செலாவணி இருப்பை அதிகரித்து சீன அரசுக்கு உதவத்தான் செய்யும். ஆனால் இறக்குமதி குறைவது சீனாவின் அடிப்படை பொருளாதார அமைப்பையே உலுக்கி விடும்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக சீனா கட்டமைத்து கட்டிக்காத்து வரும் அதன் பொருளாதாரம் முழுக்க முழுக்க ஒரே ஒரு விஷயத்தையே நம்பியிருக்கிறது - ஏற்றுமதி. ஏற்றுமதிப் பொருளாதாரக் கொள்கையால் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து உலகத்தின்‌ இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் வளர்ந்திருக்கிறது சீனா. இன்று சரக்குகளாகவும் சேவைகளாகவும் 2.2 ட்ரில்லியன் டாலர்களுக்கும் மேல், அல்லது அதன்‌ ஜிடிபியில் 20% வரை ஏற்றுமதி மட்டுமே செய்து வருகிறது. உலகப் பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை (1.57 ட்ரில்லியன் டாலர்) விட 600 பில்லியன் டாலர் அதிகமாக ஏற்றுமதி செய்யும் சீனா தான் உலகிலேயே அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடு. ஏற்றுமதித்‌ திறனால் இந்தியாவின் 2019ம் ஆண்டு ஜிடிபி மதிப்பை விட அதிகமாக 3.1 ட்ரில்லியன் அந்நிய செலாவணி இருப்பு வைத்துள்ளது சீனா. மேற்கத்திய நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்திக்காக மலிவான விலைக்கு மனித வளத்தைக் கொடுத்து உலகின் தொழிற்சாலையாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. சீனாவின் வளர்ச்சி முழுக்க முழுக்க மலிவான உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைச் சுற்றி‌ ஏற்பட்டதேயாகும். ஆனால் தற்போது பல நாடுகளும் தங்கள் நலனைப் பற்றி யோசிக்கத் துவங்கி விட்டதால் ஏற்றுமதி குறைவதோடு 'உலகின் தொழிற்சாலை' என்ற சீனாவின் நிலை கேள்விக்குறியாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவல் இப்படிப்பட்ட வெளிப்படைத் தன்மை இல்லாத ஒரு நாட்டுடன் வர்த்தகம் செய்வது மனித குலத்திற்கே ஆபத்து என்று பல நாடுகளையும் உணரச் செய்திருக்கிறது.

தற்போது உலகின் பலம்வாய்ந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் ஒரு குறிக்கோளுடன் களமிறங்கியுள்ளன - அது விநியோக சங்கிலியை ( supply chain) மறுசீரமைத்து சீனாவை பலவீனமாக்குவது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக பல நாடுகளும் சீனப் பொருட்கள் மீதான சுங்க வரியை அதிகரித்தும் சீனாவில் இருக்கும் தங்கள் நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி அலகுகளை வேறு நாடுகளுக்கு மாற்ற உதவித்தொகை அளிப்பதாக அறிவித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பெரும்பாலான இந்த நிறுவனங்கள் தெற்காசிய நாடுகளுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தங்களது தொழிற்சாலைகளை மாற்றி வருகின்றன. இந்த மாற்றம் சீனாவின் ஏற்றுமதி குறைவு மற்றும் லட்சக்கணக்கில் வேலையிழப்பு ஆகியவற்றில் போய் முடியும் வாய்ப்பு உள்ளது.

இதே நிலை நீடித்தால் அது சீனாவின் பொருளாதாரத்திற்கும் சரி, அரசியல் நிலைத்தன்மைக்கும் சரி, சோதனையாக அமையும். ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சியின் அளப்பரிய அதிகாரம் கடந்த நாற்பது ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் ஜிடிபியை வளரச் செய்ததிலும் அதன் மூலம்‌ மிகக் குறுகிய காலகட்டத்திலேயே மக்களிடம் செழிப்பைக் கொண்டு வந்ததிலும் இருந்தே வந்துள்ளது. ஏற்றுமதியில் ஏற்படும் வீழ்ச்சி காரணமாக பொருளாதார வளர்ச்சி குறையக் குறைய ஜனநாயக ஆட்சி முறையைக் கோரும் இயக்கங்களும் அதன் வழியே கம்யூனிஸ்ட் சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பும்‌ வலுக்கப் போகிறது. எனவே, சீன கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ள அச்சப்படும் சூழல் வருவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன என்றால் அது மிகையாகாது.

Similar News