முஸ்லிம் தம்பதிகளுக்கு ஷரியத் கவுன்சில் விவாகரத்து சான்றிதழ் வழங்க முடியாது - ஐகோர்ட் உத்தரவு
முஸ்லிம் தம்பதிகளுக்கு ஷரியத் கவுன்சில் விவாகரத்து சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறி அந்த சான்றிதழை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் 'தலாக்' நடைமுறையைப் போல கணவனை மனைவி விவாகரத்து செய்ய 'குலா' நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷரியத் கவுன்சிலில் மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்யக்கோரி சென்னையை ஐகோர்ட்டில் கணவன் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் கருத்து வேறுபாடு காரணமாக என்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி ஷரியத் கவுன்சிலில் குலா சான்றிதழ் பெற்றுள்ளார். இதை காட்டி விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறுகிறார். எனவே அந்த சான்றுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர் அப்துல் முபீன் ஆஜராகி மொகாலயர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்பட்ட பத்வா முறைக்கு சுதந்திர இந்தியாவில் சட்டப்படி அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் அவையெல்லாம் சட்டப்படி செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் 2014 ஆம் ஆண்டு தீர்ப்பளித்து உள்ளது . ஷரியத் கவுன்சில் விவாகரத்து வழங்க முடியாது என்று 2016 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டும் தீர்ப்பு அளித்துள்ளது. இது போன்ற மற்றொரு தீர்ப்பை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சும் வழங்கியுள்ளது. இவற்றை மீறி தற்போது மனுதாரர் மனைவிக்கு 'குலா' என்ற விவாகரத்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்தனைக்கும் மனைவியுடன் சேர்ந்து வாழ மனுதாரர் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவும் பெறப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதை அடுத்து நீதிபதி பிறப்பித்து உத்தரவில் "ஷரியத் கவுன்சில் இதுபோல விவாகரத்து சான்றிதழை சட்டப்படி வழங்க முடியாது இந்த கவுன்சில் கோர்ட் அல்ல முஸ்லிம் சட்டப்படி குடும்ப நல கோர்ட்டுகளை அணுகி முஸ்லிம் பெண்கள் குலாப் பெறலாம் . ஷரியத் கவுன்சில் போன்ற அமைப்புகளில் இதுபோல விவாகரத்து சான்றிதழ் பெற முடியாது. அதனால் மனுதாரரின் மனைவி 2017 ஆம் ஆண்டு பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்கிறேன். மனுதாரரும் அவரது மனைவியும் தமிழ்நாட்டு சட்டப்பணி ஆணைக்குழு அல்லது குடும்ப நல கோர்ட்டை அணுகி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.