சுனில், பி.டி.ஆர் வெளியே; பிரஷாந்த் கிஷோர் உள்ளே? - தி.மு.க பவர் பாலிடிக்ஸ்!

சுனில், பி.டி.ஆர் வெளியே; பிரஷாந்த் கிஷோர் உள்ளே? - தி.மு.க பவர் பாலிடிக்ஸ்!

Update: 2019-11-27 02:58 GMT

தி.மு.க-வின் முக்கியப்புள்ளியாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் வலது கரமாக செயல்பட்டு வந்தவர் சுனில். பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியோரோடு இணைந்து பணிபுரிந்து வரும் அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோரிடம் பணியாற்றிய சுனில், கடந்த 2015-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பணி புரிய ஆரம்பித்ததாக ஊடக மற்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


"தற்போது திமுகவின் அரசியல் யுக்தியை உருவாக்கி செயல்படுத்தும் பணி, OMG என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகள், ட்வீட்டுகள் போன்ற அனைத்தையும் முடிவு செய்வது இந்த டீம்தான்.  இந்த டீமில் சுனில் முக்கிய நபர், இவர் வேலுவின் ஆள்" என சவுக்கு ஷங்கர் கடந்த வருடம் எழுதிய திமுகவின் மண்டகசாயம் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், தி.மு.க மூத்த தலைவர்களுக்கெல்லாம் இல்லாத அணுகல்(access) சுனிலுக்கு மு.க.ஸ்டாலினிடம் இருந்தது என தி.மு.க வட்டாரங்கள் வருடக்கணக்கில் பேசி வந்தன. எப்போது வேண்டுமானலும் தொடர்பு கொள்ளலாம், தேர்தல்களின் போது வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு, எந்தெந்த வேட்பாளர் எந்த யுக்தியை கையாள வேண்டும், எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும், எங்கு செலவழிக்க வேண்டும் என்ற வானளாவிய அதிகாரத்துடன் தி.மு.க-வின் அதிகார மையத்தில் தவிர்க்க முடியாத நபராக வலம் வந்தவர் சுனில்.


மு.க.ஸ்டாலினும், தி.மு.க மேல்மட்டமும் அவரை வெகுவாக நம்பி அனைத்து மரியாதையும் கொடுத்தது மட்டுமின்றி, மாத சம்பளமாக மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.


இந்நிலையில் சுனிலின் நடவடிக்கைளில் லேசாக சந்தேகம் கிளம்பவே, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், இணைச்செயலாளர் அன்பில் மகேஷ் மற்றும் குழுவினர் அவரை கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது சுனில் ஆளும் கட்சி மேல்மட்டத்தில் நெருங்கிய தொடர்புடன் இருந்ததும், தினமும் அவர்களுடன் வேறொரு எண்ணில் இருந்து தொடர்புக் கொண்டு பேசி வந்ததும் தெரிய வரவே அதிர்ச்சியல் மூழ்கியது அறிவாலய மேல்மட்டம் என அறிவாலயத்தில் இருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் நமக்கு தெரிவித்தன.


மிக சமீபத்தில்ம, சுனிலுக்கு எதிரான இந்த ஆதாரங்களையெல்லாம் திரட்டி, ஸ்டாலின், உதயநிதி, மகேஷ் ஆகியோர் சுனிலை சுற்றி வளைக்கவே, வேறு வழியின்றி மாட்டியுள்ளார் சுனில். "ஆளும்தரப்பில் இருந்து விவரங்களை சேகரிக்கவே பேசி வந்தேன்" என சுனில் சொன்னாலும், அதை நம்பும் அளவுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இல்லை மு.க.ஸ்டாலின். அனைத்தையும் விட்டுவிட்டு பதவியில் இருந்து விலகிவிடுமாறு தெரிவித்து விட்டனராம்.


சுனில், பிரஷாந்த் கிஷோர் குழுவினரை தி.மு.க பயன்படுத்தாததற்கும் காரணம் என ஸ்டாலின் தரப்பு நினைக்கிறதாம். பிரஷாந்த் கிஷோர் அரசியல் மேற்பார்வைக்கு தி.மு.க-வால் நியமிக்கப்பட்டால் சுனிலின் மவுசு குறைந்து விடும் என அவர் எண்ணியதால் இதை தவிர்த்து வந்துள்ளார் என கொதிக்கிறதாம் ஸ்டாலின் தரப்பு.


சுனில் இந்த விசாரணையின் போது ஒரு கட்டத்தில் "நீங்களாக என்னை வெளியில் அனுப்பினால் என் எதிர்காலம் பாதிக்கும் என கேட்டுக்கொண்டதாகவும், தானாக வெளியில் சென்று விடுவதாக பிம்பம் அமைக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு சரி என சொல்லப்பட்டதாகவும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே, தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாலர் பி.டி.ஆர் தியாகராஜன் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத தி.மு.க மேல்மட்டம் அவரை இனி ஐ.டி பொறுப்புகளை கவனிக்க வேண்டாம் என தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், சுனிலும் தற்போது வெளியேறி உள்ளதால் பிரசாந்த் கிஷோர் குழு தி.மு.க 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முழு வீச்சியில் செயல்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.


மு.க.ஸ்டாலினை பிடித்த கெட்ட நேரம் ஒழிந்து விட்டதாக சுனிலின் வெளியேற்றத்தை கொண்டாடுகிறதாம் அறிவாலய மேல்மட்டம்.



Similar News