அடக்கு முறையை கையாளும் திமுகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களால் தக்க பாடம் புகட்டப்படும்- அண்ணாமலை!
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அண்ணாமலை கூறினார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த நேரத்தில் தமிழக கோவில்கள் விழாக்கோலம் கொண்டது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். அதனை தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவில் அறங்காவலர் அழைத்ததன் பேரிலேயே நான் இங்கு வந்தேன். கோபாலபுரம் என்ற காரணத்துக்காக வரவில்லை அமைதியான முறையில் நடந்த கும்பாபிஷேக நிகழ்வில் தமிழகத்தில் பெரிய பிரச்சனையை உண்டாக்கி மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது திமுக தான் .முதலிலேயே அவர்கள் அனுமதி வழங்கி இருந்தால் நாம் ஏன் இவ்வளவு பெரிய சட்ட போராட்டம் நடத்த போகிறோம் .தமிழகத்தில் மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி இந்த நிகழ்வை தமிழக மக்கள் பார்க்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். தமிழக அரசு மக்களின் நம்பிக்கைக்கும் இந்து மக்களுக்கும் எதிராக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. உரிய ஆதாரங்களுடன் கோர்ட்டில் முறையிட்டோம் .அவசர வழக்காக ஏற்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
எந்த இடத்திலும் நேரலை செய்யவோ பஜனை வழிபாடுகள் நடத்தவோ தடை இல்லை என்று கோர்ட்டு கூறி உள்ளது. தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்துள்ளது. ராமருக்கும் தமிழகத்துக்கும் இருக்கக்கூடிய ஆழமான பந்தத்தை பிரதமர் மோடி இன்னும் புதுப்பித்து வலிமைப்படுத்தி இருக்கிறார். மக்களின் நம்பிக்கைக்கு எதிராக அடக்குமுறையை கையாளுகிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது . கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்றால் அனுமதி வாங்கி தாருங்கள் என்கிறார்கள்.
தமிழகத்தில் தேவையில்லாத ஒரு துறை என்றால் அது இந்து அறநிலையத்துறை தான். எனவே 2026 இல் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது இந்து அறநிலையத்துறை இருக்காது. ராகுல் காந்தி ஒவ்வொரு தேர்தலின் போது அக்பர், ஆண்டனி என பல அவதாரம் எடுக்கிறார்.அவர் அசாம் சென்றபோது அங்கு மக்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷம் போட்டனர். இதைக் கேட்ட ராகுல் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ராகுல் காந்தி இந்தியாவில் எங்கு செல்லவும் அனுமதி இருக்கிறது. ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் எனவும் மோடி எனவும் மக்கள் சொல்லக்கூடாது என ராகுல் காந்தி கருதுவது ஏற்புடையது அல்ல இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI