அறிவியல் ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு - இஸ்ரோ விஞ்ஞானிகள் புகழாரம்!
அறிவியல் ஆராய்ச்சியில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 திட்டங்களை கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடித்தது. இதனை தொடர்ந்து விண்வெளி ஆய்வு திறனை மேம்படுத்துவதற்காக விண்வெளித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 2024 - 25ஆம் நிதி ஆண்டில்13 ஆயிரத்து 42 கோடியே 75 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது முந்தைய ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் 12,543 கோடியே 91 லட்சத்தை விட ரூபாய் 498 கோடியே 84 லட்சம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி வருகிற 2035 ஆம் ஆண்டிற்குள் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பவும் இந்தியாவுக்கான தனியான ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் தனது லட்சியமான ககன்யான் பணியை மேற்கொள்ளவும் உதவும். அது போல் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு 2024- 2025 ஆம் ஆண்டுக்கு ரூபாய் 16 ஆயிரத்து 63 கோடியே 94 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது .இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூபாய் 16 ஆயிரத்து 361 கோடியை விட 242 கோடி அதிகமாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள மூன்று முக்கிய துறைகளுக்கு இந்த ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்கப்படும்.
குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு ரூபாய் 8,029.01 கோடியும் பயோடெக்னாலஜி துறைக்கு ரூபாய் 2251.52 கோடியும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி துறை ரூபாய் 6323.41 கோடியும் ஒதுக்கீடு மூலம் பயனடையும். உலக அளவில் செலவு குறைந்த பணிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்றுள்ள இஸ்ரோ சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கும் அதே வேளையில் பெரிய மற்றும் நீண்ட கால பணிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதால் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் அதிகரிப்பது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.