13 வயது சிறுமியைக் கடத்திய பாதிரியார் - உடந்தையாக இருந்த சகோதரி கைது.!

13 வயது சிறுமியைக் கடத்திய பாதிரியார் - உடந்தையாக இருந்த சகோதரி கைது.!

Update: 2020-11-26 11:35 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையின் பெருங்காட்டூர் கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் சமூக சேவகர் என்ற பெயரில் தங்கி இருந்து கிறிஸ்தவ மத போதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் போளூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பாதிரியார் என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இவர் ஜவ்வாது மலை கிராமத்தில் தங்கி இருந்து மலை வாழ் மக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பரவலால் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பதைப் பயன்படுத்தி டியூஷன் வைத்து பாடம் சொல்லிக் கொடுப்பதாகக் கூறி குழந்தைகளை தனது வீட்டுக்கு அனுப்புமாறு கூறி இருக்கிறார் ஜெயராஜ்.

வீட்டில் விளையாடிக் கொண்டு தானே இருக்கிறார்கள் என்று பெற்றோரும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் டியூஷனுக்கு வந்த சிறுமிகளிடம் ஜெயராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் ஜெயராஜை எச்சரித்ததோடு குழந்தைகளை டியூஷன் அனுப்புவதையும் நிறுத்தி உள்ளனர். 

இவ்வாறிருக்க கடந்த மாதம் 24ஆம் தேதி கிராமத்தில் வசித்து வந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரை பாதிரியார் கடத்தி விட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் பாதிரியார் செல்ஃபோன் ஏதும் பயன்படுத்தாததால் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

சிறுமியை கடத்திச் சென்று இருபது நாட்களுக்கும் மேல் ஆகி விட்ட நிலையில், தனது மகள் எந்த நிலையில் உள்ளாரோ என்ற அச்சத்தில் தந்தை திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியிடம் உடனடியாக மகளைக் கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

காவல் துறையினரின் விசாரணையில் பாதிரியார் ஜெயராஜுக்கு ஏற்கனவே இரு முறை திருமணமாகி மனைவிகள் விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. சிறுமியை கடத்திக் கொண்டு பாதிரியார் வேளாங்கண்ணி சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து காவலர்களும் தந்தையும் அங்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லாதது தெரிய வந்துள்ளது.

தலைமறைவாக இருக்கும் பாதிரியாரைப் பிடிக்க காவல் துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் பாரதியார் தனது அக்கா பரிமளா தேவி(53) என்பவரின் வீட்டில் அவர் தங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று தேடினர். ஆனால் அங்கு சிறுமி இல்லை. 

சிறுமியை கடத்தியது தெரிந்தும் அவர் தனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டதை காவல்துறையிடம் தெரியப்படுத்தாத பரிமளா தேவி மீது சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் உடந்தையாக இருந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Similar News