கோடைகால மின் தேவையை சமாளிக்க அனல் மின் நிலையங்கள் முழு திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
கோடைகால மின்தேவையை சமாளிக்க முழு திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் எதிர்பார்த்ததை விட வெயில் அளவு அதிகமாக இருப்பதால் மின்சாரத்தின் தேவையும் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கான அதிகபட்ச மின் தேவை 230 ஜிகாவட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இருபதாம் தேதி உச்சபட்ச மின் தேவை 205.52 ஜிகாவட்டாக அதிகரித்தது . அன்றைய தினம் 4,281 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது . எனவே மின்சார தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய மின்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை முடிக்கி விட்டுள்ளது.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் இயங்கும் 15 அணுமின் நிலையங்கள் தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. டாடா பவர் அதானி மின் நிலையங்கள் எஸ்ஸார் மின் உற்பத்தி நிலையம், ஜே. எஸ். டபிள்யூ ரத்னகிரி, மீனாட்சி எனர்ஜி உட்பட 15 அனல் மின் நிலையங்களுக்கு இது தொடர்பான நோட்டீஸை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாட்டின் கோடை காலமின்தேவை இன்று அதிகரித்து வருகிறது. ஆகவே மார்ச் 16ஆம் தேதியிலிருந்து ஜூன் 15ஆம் தேதி வரை தங்களது அனல்மின் நிலையங்கள், இறக்குமதி நிலக்கரியைப் பயன்படுத்தி தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் கோடைகால மின் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.