திருக்குறள் சொன்னா, இலவசமாக பெட்ரோல் - கரூர் பெட்ரோல் பங்கின் அசத்தல் அறிவிப்பு.!

திருக்குறள் சொன்னா, இலவசமாக பெட்ரோல் - கரூர் பெட்ரோல் பங்கின் அசத்தல் அறிவிப்பு.!

Update: 2021-02-11 16:38 GMT

திருக்குறள் கற்பதை ஊக்குவிக்கும் விதமாக, 20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் நாகம்பள்ளி கிராமம் வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ளது வள்ளுவர் பெட்ரோல் பங்க் என்னும் தனியார் பெட்ரோல் பங்க்.

இந்த பகுதியில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவி, மாணவர்கள் மத்தியில் திருக்குறள் பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறளில் 10 குறளை ஒப்புவித்தால் சொன்னால் அரை லிட்டரும், 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் நிர்வாகம் அறிவித்தது. மேலும், இந்தப் போட்டியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என்று யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, பெற்றோருடன் மாணவர்கள் பெட்ரோல் பங்கிற்குச் சென்று திருக்குறளைச் சொல்லி பெட்ரோலை இலவசமாக வாங்கி செல்கின்றனர். மேலும், இந்தப் போட்டி எங்களுக்கு ஒரு ஊக்கமாகவும், படித்ததை மறக்காமல் இருக்க உதவியாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர். இந்த திருக்குறள் திட்டம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம், "மாணவர்களிடம் தமிழ் வாசிப்பதும், பேசுவதும் குறைந்து வருகிறது. மேலும், மக்களிடையே திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.

"தை மாதம் திருவள்ளுவர் தினம் முதல் ஏப்ரல் 31 வரை மாணவ, மாணவிகள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் போது திருக்குறளை கூறினால் போதும். அவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கு அவர்களது வாகனங்களுக்கு பெட்ரோல் இலவசம் என்றதோடு, ஏன் நாம் திருக்குறளை அதிக அளவில் நேசிக்கின்றேன் என்றால், அன்புக்கு அம்மா, கண்டிப்பிற்கு அப்பா, என்றெல்லாம் விட, நல்ல வாழ்க்கை அமைய திருக்குறளை கற்றாலே போதும். ஆகவே தான், திருக்குறளின் தத்துவங்களை இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்வது நல்லது" என்கின்றார் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன். ஆகவே தினந்தோறும் திருக்குறள் ஒப்புவித்தால் அதற்காக இலவசமாக பெட்ரோல் வழங்குவதில் எங்களுக்கும் ஒரு மன நிம்மதி எனவும் கூறுகிறார். 

Similar News