இது வெறும் இடைக்கால பட்ஜெட் அல்ல அனைத்து தரப்பினருக்கும் பயன் தரும் புதுமையான பட்ஜெட்- பிரதமர் மோடி!

அனைத்து தரப்பினருக்கும் பயன் தரும் புதுமையான பட்ஜெட் என்று இடைக்கால பட்ஜெட் குறித்த பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-02 06:15 GMT

நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார் .இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது :-


இந்த இடைக்கால பட்ஜெட் வளர்ந்த இந்தியாவின் நான்கு தூண்களாக இளைஞர்கள் , ஏழைகள் , பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. இளம் இந்தியாவின் இளம் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. நிதி பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளது. அதே நேரம் இந்த பட்ஜெட்டில் மொத்த செலவினம் வரலாறு காணாத வகையில் ரூபாய் 11,11,111 கோடியாக அதிகரித்துள்ளது.


21ம் நூற்றாண்டில் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்திய இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் புதிய வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும். இது வெறும்  இடைக்கால பட்ஜெட் அல்ல. அனைவரையும் உள்ளடக்கிய புதுமையான பட்ஜெட் ஆகும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது .ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது. 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்குவது எங்கள் குறிக்கோளாக இருந்தது.


தற்போது இந்த இலக்கு மூன்று கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் நோக்கம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி விலக்கு திட்டம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும். இவ்வாறு பிரதமர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News