வெற்றியின் உயரங்களை அடைய வேண்டும் குறுகிய பார்வையில் இருந்து விடுபட வேண்டும் - பிரதமர் மோடி உரை
வெற்றியின் உயரங்களை அடைய குறுகிய பார்வையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கின் மகள்களான ஜோரவர் சிங், படேசிங் ஆகியோர் தங்கள் மத நம்பிக்கைக்காக கொல்லப்பட்ட தினமான டிசம்பர் 26 ஆம் தேதியை 'வீர்பால் திவஸ்' ஆக அனுசரிக்கப்படும் என்று குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாளான கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அவுரங்கசீப்பும் அவரது குழுவினரும் குரு கோவிந்த் சிங்கின் குழந்தைகளை வாளைக் காட்டி மதமாற்றம் செய்ய முயன்றனர். ஆனால் மறுத்ததால் இரண்டு அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவுரங்கசீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவை மாற்றும் அவரது திட்டங்களுக்கு எதிராக குரு கோவிந்த் சிங் ஜி மலைபோல் நின்ற அந்த சகாப்தத்தை நினைத்து பாருங்கள். அதீத வீரம் மற்றும் தியாகத்தை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.இந்தியா என்றால் என்ன? அதன் அடையாளம் என்ன? என்பதை இந்த தினம் நமக்கு சொல்கிறது .
மேலும் ஒவ்வொரு ஆண்டும் நமது கடந்த காலத்தை அடையாளம் கண்டு நமது எதிர்காலத்தை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும். இது நமது இளம் தலைமுறையின் பலத்தை அனைவருக்கும் நினைவூட்டும். வரலாற்றின் பெயரால் மக்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் முறைகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்காக புனை கதைகள் கற்பிக்கப்படுகின்றன? ஆனால் அமுத காலத்தில் முன்னேறவும் எதிர்காலத்தில் இந்தியாவை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்லவும் நாம் கடந்த காலத்தின் குறுகிய பார்வைகளில் இருந்து விடுபட வேண்டும். புகழ்பெற்ற வரலாற்றை கொண்ட எந்த ஒரு நாடும் தன்னம்பிக்கை மட்டும் சுயமரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும்.