ஈஷா சார்பில் இயற்கை இடுப்பொருள் தயாரிப்பு பயிற்சி - பல்வேறு மாவட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள நல்லமுத்து இயற்கை விவசாயப் பண்ணையில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி நேற்று (ஆகஸ்ட் 7) சிறப்பாக நடைபெற்றது.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள நல்லமுத்து இயற்கை விவசாயப் பண்ணையில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி நேற்று (ஆகஸ்ட் 7) சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.. அவர்களுக்கு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறைகள் மற்றும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. மொத்தம் 12 வகையான இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மண்ணை வளமாக்கும் வழிமுறைகள், இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பூச்சி கட்டுப்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
பண்ணையின் உரிமையாளர் திரு.கணேஷ் ராஜா அவர்கள் கலந்துகொண்டு தனது 20 வருட இயற்கை விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். முன்னோடி இயற்கை விவசாயிகள் திரு.சுப்பிரமணியம் மற்றும் திரு.முரளிதரன் அவர்கள் தங்களுடைய இயற்கை விவசாய அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா விவசாய இயக்கம் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.