திண்டுக்கல் அருகே நிலத்தகராறில் பயங்கரம் சின்னத்திரை நடிகர் உள்பட இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு - விவசாயி வெறிச்செயல்!
திண்டுக்கல் அருகே நில தகராறில் சின்னத்திரை நடிகர் உட்பட இரண்டு பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.வரிசையில் ஈடுபட்ட விவசாயியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லுரை சேர்ந்தவர் கருப்பையா . சின்னத்திரை நடிகர் .இவர் வாணி - ராணி சீரியலில் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் அருகே சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ளது. அங்கு தங்கியிருந்து கருப்பையா விவசாயம் செய்து வருகிறார். சிறுமலை அகஸ்தியர் புரத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு . அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார் . அவரும் கருப்பையாவும் நண்பர்கள் . சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் தனபால். விவசாயி. இவர் சிறுமலை அகஸ்தியர் புரத்தில் நிலம் வாங்கி அங்கேயே தங்கி இருந்து விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபாலிடம் கருப்பையா 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். இந்த நிலத்தை அளவீடு செய்தபோது 4.5 ஏக்கர் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கருப்பையா ராஜாக்கண்ணு ஆகியோர் தனபாலிடம்1/2 ஏக்கர் நிலத்துக்கான பணத்தை திருப்பித் தருமாறு கேட்டனர். இதனால் அவர்கள் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அகஸ்தியர் புரத்தில் உள்ள தனது வீட்டில் தனபால் இருந்தார் .அப்போது கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகியோர் அங்கு சென்றனர். அவர்கள் மூன்று பேரும் வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தனர் . அப்போது அரை ஏக்கர் நிலத்துக்கான பணத்தை தனபாலிடம் அவர்கள் மீண்டும் கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தனபால் வீட்டுக்குள் சென்று நாட்டு துப்பாக்கியுடன் வெளியே வந்தார்.
பின்னர் அவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் . இதனை கண்ட கருப்பையா ராஜாகண்ணு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் சுதாரிப்பதற்குள் கருப்பையா மீது துப்பாக்கியால் தனபால் சரமாரியாக சுட்டார். இதில் கருப்பையாவின் வயிறு ,கை மற்றும் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதை தடுக்க முயன்ற ராஜாக்கண்ணுவும் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு சுத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் தனபால் வீடு நோக்கி ஓடி வந்தனர். அங்கு கருப்பையா ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.