ஐக்கிய அரபு அமீரகம், வங்க தேசத்திற்கு 64,400 டன் வெங்காய ஏற்றுமதி- மத்திய அரசு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசம் ஆகிய நட்பு நாடுகளுக்கு 64,400 டன் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச நாடுகளுக்கு 64,400 டன் வெங்காயத்தை தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் மூலம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள போதும் நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்து வருகிறது. உள்நாட்டில் வெங்காய இருப்பை உறுதி செய்யும் வகையில் வரும் 31-ஆம் தேதி வரை ஏற்றுமதிக்கு தடை விதித்து கடந்தாண்டு டிசம்பர் எட்டாம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.
அதுபோல விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் கையிருப்பில் இருந்து விடுவித்து மானிய விலையில் வெங்காய விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசத்துக்கு வெங்காயமம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது .இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்ட அறிவிக்கையில் வங்கதேசத்துக்கு 50,000 வெங்காயம் ஏற்றுமதி செய்யவும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது .
இந்த ஏற்றுமதிகள் அனைத்தும் என்.சி.இ.எல் மூலம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவுக்கு 30,000 டன் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கும் ஆப்பிரிக்க நாடுகளான டிஜிபௌவுட்டி மற்றும் கைனீபிஸ்ஸாவ் நாடுகளுக்கு 80,000 நொய்யரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
SOURCE :Dinamani