தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு "மோடியின் மகள்" திட்டம் - அசத்திய வானதி சீனிவாசன்!
"மோடியின் மகள்" என்ற திட்டத்தை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன் துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
மோடியின் மகள் திட்டத்தின் துவக்க விழா, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கமலா துரைசாமி மஹாலில் 12.11.2020 அன்று காலை 11 மணிக்கு துவங்கியது. இந்த திட்டத்தை துவக்க வைத்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன், தந்தையை இழந்து வளரும் 100 பெண் குழந்தைகளுக்கு, கல்விக்கு தேவையான உதவிகளை வழங்கினார். அத்துடன் தீபாவளி பரிசாக புத்தாடை, இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன.
Modi's Daughter Programme at Kovai today.@blsanthosh @JPNadda @BJP4TamilNadu @BJPMahilaMorcha pic.twitter.com/FnBddh5zlZ
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 12, 2020
இந்த திட்டத்தை துவக்கி வைத்து பேசிய வானதி சீனிவாசன், "இந்த திட்டத்தின் மூலம் தந்தையை இழந்து வாடும் பெண் குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை கல்விக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனது மக்கள் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம், பாரத பிரதமரின் மத்திய அரசு திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேருகிறதா என்பதை அறிய ஒரு சர்வே எடுத்தோம். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சூழ்நிலைகளையும் தெரிந்துக்கொண்டோம். அப்போது மது பழக்கத்தின் காரணமாக குடும்ப தலைவர்கள் இறப்பதன் காரணமாக, வறுமையினால் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்தோம். எனவே, ஒரு போதும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை மட்டும் நிறுத்தக்கூடாது", என்று பேசினார்.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பெண் குழந்தைகளுக்கு "நீ என் மகள்" என்ற வாசகத்துடன் கூடிய பாரத பிரதமர் மோடியின் படம் வழங்கப்பட்டது.