அபிநந்தனுக்கு “வீர் சக்ரா” விருது! நாளை, சுதந்திரதின விழாவில் வழங்கப்படுகிறது!!

அபிநந்தனுக்கு “வீர் சக்ரா” விருது! நாளை, சுதந்திரதின விழாவில் வழங்கப்படுகிறது!!

Update: 2019-08-14 09:39 GMT


பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு மத்திய அரசு நாளை வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது. 


ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில், பிப்ரவரி 26-ஆம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. 


இதையடுத்து, பிப்ரவரி 27-ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்த  பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். 


பின்னர் பாராசூட் மூலமாக தப்பித்த அபிநந்தன் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். 


அதன்பின்னர், உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக, பாகிஸ்தானின் பிடியில் இருந்த அபிநந்தன், இரு தினங்களுக்கு பின்னர், மார்ச் 1-ஆம் தேதி வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் . 


அபிநந்தனின் இந்த வீர தீரச் செயலுக்காக அவருக்கு 'வீர் சக்ரா' விருது வழங்க வேண்டும் என்று இந்திய விமானப்படை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.  அதன்படி, நாளை சுதந்திர தினத்தையொட்டி, அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Similar News