போலிகள் கருவறுக்கப்படுகின்றனர்.. இரண்டே மாதத்தில் மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி..!

போலிகள் கருவறுக்கப்படுகின்றனர்.. இரண்டே மாதத்தில் மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி..!

Update: 2018-11-23 04:26 GMT





முன்னதாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் குழந்தை கடத்தல் வதந்தியால் நாடு முழுவதும் பலர் அடித்துக்கொல்லப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வாட்ஸ் அப்பில் பகிரப்படும் சர்ச்சையான கருத்துகளைத் தடுக்க வேண்டும் மற்றும் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாகக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.


இதனையடுத்து கடந்த ஆகஸ்டில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வாட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரியிடம் வலியுறுத்தி இருந்தார். தற்போது சில தினங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப்பில் பரவும் பொய் செய்திகளை களையெடுக்க, 20 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், பொய் செய்திகள் எவ்வாறு பரவுகின்றன, அதை தடுக்க அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த குழு ஆய்வு நடத்தும் என்றும், 20 குழுக்களில், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் இடம் பெற்றிருப்பதாக  வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் பரவும் வதந்திகளால் ஏற்படும் பிரச்சனைகளை களைவதற்காக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதேபோல், பல்வேறு நாடுகளும் அறிவுறுத்தியதை அடுத்து, பொய் செய்திகளை களைய 20 குழுக்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.


இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த தலைவர் நியமனம் நடந்திருக்கிறது. முன்னதாக குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது.






Similar News