இதை மட்டும் செய்தால் இந்த ஆண்டே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்: உலக சுகாதார அமைப்பு தலைவர் திட்டவட்டம்!
உலக நாடுகள் விரிவான நடவடிக்கை மேற்கொண்டால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் பரபரப்பான தகவலை கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் அதன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுடன் சுகாதார அமைப்பு போராடி வருகிறது.
மேலும், கொரோனாவில் இருந்து உருவான டெல்டா, ஆல்பா, பீட்டா, ஒமைக்ரான் உள்ளிட்டவைகள் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வைரஸைவிட தற்போது ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இருந்தபோதிலும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் முன்பு இருந்த பாதிப்பைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த ஆண்டுடன் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்றார். நேற்று (ஜனவரி 24) உலக சுகாதார அமைப்பின் 150வது கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் பேசும்போது: கொரோனா வைரஸ் தொற்றை ஒழித்து கட்டுவதில் சர்வதேசம், பிராந்தியம், தேசிய உள்ளிட்ட உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து தனது பணியை இடைவிடாது செய்து வருகிறது. அனைத்து நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் வியூகங்களை அளித்து வருகிறது. மேலும், அனைத்து நாடுகளும் இது போன்ற வியூகங்களை பயன்படுத்தி நடவடிக்கை தொடர்ந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு முடிவு கட்டி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi