சுரங்க பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் - பிரதமர் மோடி நம்பிக்கை!

சுரங்க பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை தைரியமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-11-22 01:47 GMT

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாரா தண்டல்கான் இடையே சுமார் 4.5 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12 ஆம் தேதி இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்க பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.அவர்களை மீட்கும் பணியில் தேசிய மாநில பேரிடர் மீட்பு படையினருடன் பல்வேறு துறையினர் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன .


ஆனால் பல்வேறு பிரச்சனைகள் இடையூறு காரணமாக விபத்து நடந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் தொழிலாளர்கள் மீட்கப்படவில்லை. எனவே மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் மாற்றுத்திட்டங்களையும் மீட்பு படையினர் முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்கள் சிக்கி உள்ளது தொடர்பாக உத்தரகாண்ட் முதல் மந்திரி உடன் பிரதமர் மோடி பேசினார்.


பணியின் நிலை குறித்து விளக்கிய உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, உணவு ,தண்ணீர் வழங்கப்பட்டு தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதை அடுத்து மத்திய மாநில துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.


தொழிலாளர்களை தைரியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் மீட்பு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவதற்காக ஜெனிவாவை சேர்ந்த சர்வதேச சுரங்க பாதை மற்றும் நிலத்தடி பகுதி சங்க தலைவரான நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் சுரங்கப்பாதை பகுதிக்கு வந்தார். மீட்பணிகளை ஆய்வு செய்த அவர் ஆலோசனைகளையும் வழங்கினார். இதுவரையிலான முயற்சிகள் குறித்து திருப்தி தெரிவித்த டிக்ஸ் பெரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.


மலையின் மேலிருந்து துளையிடுவது போன்ற மாற்றுவழிகள் குறித்தும், நாங்கள் ஆலோசிக்கிறோம் என்றும் அவர் கூறினார். ஆனால் எப்போது தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்ற கால அளவு எதையும் அவர் தெரிவிக்கவில்லை. சுரங்க பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நான்கு அங்குல குழாய் வழியாக ஆக்ஸிஜன் தண்ணீருடன் உலர் பழங்கள் போன்ற ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.


இந்த நிலையில் அவர்களுக்கு அதிகளவிலான உணவுகளையும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்கும் வகையில் 53 மீட்டர் நீளத்துக்கு இடுபாடுகளுக்குள் ஒரு 6 அங்குல குழாய் நேற்று செலுத்தப்பட்டது. அதன் மூலம் சப்பாத்தி , குருமா போன்றவற்றையும் அனுப்ப முடியும். மேலும் சிக்கி உள்ள தொழிலாளர்கள் நாங்கள் பேசுவதை கேட்க முடியும். இங்கே நாங்கள் இருப்பதை உணர முடியும். இது முதல் திருப்புமுனை ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


SOURCE :DAILY THANTHI

Similar News