"எல்லாம் தீவிரமா வேலை செய்யுங்க ஆனா ஊரடங்கு மட்டும் வேண்டாம்" - பதறிபோய் அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின்!

Update: 2021-04-26 02:15 GMT

"வேண்டாம் முழு ஊரடங்கை மட்டும் அமல்படுத்திவிடாதீர்கள்" என பதறி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும்" என்று வருகின்ற செய்திகளும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மிகுந்த கவலையளிக்கிறது. நேற்றைய தினம் மட்டும், தமிழ்நாட்டில் 13776 பேர் பாதிக்கப்பட்டு 78 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்,

வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுவதால் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமைவதற்கும், தற்போது அதிகாரிகள் செயல்பாட்டிற்கும் இடையே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் எவ்வித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது. ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிப்பது, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியைப் புதிதாக உருவாக்குவது, போதிய எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது, கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்ட 'தற்காலிக மருத்துவமனைகள்' அமைப்பது, மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிட வேண்டும்.

மே 2'ம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை. எனவே 'காபந்து சர்க்கார்' இருக்கின்ற இந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அளவில் பிரதமர் முதல் சாமானியன் வரை கொரோனோ'வை எதிர்த்து போராடி வரும் நிலையில் மே 2 வாக்கு எண்ணிக்கை இருக்கு ஊரடங்கு அமல்படுத்த வேண்டாம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது அவரின் தேர்தல் முடிவுகள் பற்றிய பயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Similar News