கனமழை வந்தாலும் செயலற்று நிற்கும் திமுக அரசு என்று விமர்சித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி!
திமுக அரசின் மெத்தனப் போக்கையும் செயலற்ற நிலையையும் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் திரு. ஸ்டாலினின் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினும், அவரது வாரிசு துணை முதலமைச்சர் திரு. உதயநிதியும் நடிப்பது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
மழை வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை! அவர்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சராகியுள்ள திரு. உதயநிதி ஸ்டாலின் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயை நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் திமுக அரசு குறியாக உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து திரு. ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சென்னை மாநகர மக்கள் திரு. ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வருவதை இன்றைய தினம் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன.