ஜெயலலிதா வணங்கிய கோட்டூர்புரம் விநாயகர் கோவிலில் வணங்கிய பின்னர் பதவி ஏற்ற ஸ்டாலின்!

Update: 2021-05-08 02:00 GMT

என்னதான் தி.மு.க தலைவர்கள் 'எங்கள் தாய் கழகம் தி.க' என்றாலும், கடவுள் மறுப்பு பேசினாலும், ஆகம விதிகளை மேடைகளில் இழிவுபடுத்தினாலும் தன் சொந்த வாழ்க்கையில் இந்து மத சம்பிரதாயம், கடவுளை வணங்குதல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர் என்பதே உண்மை.

அந்த வகையில் நேற்று பதவி ஏற்பு விழாவிற்கு ஏகப்பட்ட சம்பிரதாய விஷயங்களை ஸ்டாலின் கடைபிடித்த பிறகே முதல்வராக நாற்காலியில் அமர்ந்தார்.

அந்த வகையில் முதலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல் அமைச்சராக பதவி யேற்பதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி நேற்று காலை, காரில் புறப்பட்டு சென்றார். கோட்டூர்புரம் அருகே சென்றபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு ஸ்டாலினின் கார் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

கோட்டூர்புரம் விநாயகர் கோவிலில் விநாயகருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப் பட்டு, அதன் பிரசாதம் முதல் அமைச்சராக பதவியேற்க புறப்பட்ட ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த கோட்டூர்புரம் விநாயகர் கோவில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவிலாகும். ஜெயலலிதா முதல் அமைச்சராக இருக்கும்போது கோட்டைக்கு செல்லும்போது இந்த கோவிலில் முன்பு காரை நிறுத்தி, வழிபட்டு செல்வார். தற்போது முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கும் விநாயகர் கோவிலில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பதவி ஏற்ற பிறகு நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் 10:30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் உடனே தலைமைச்செயலகம் செல்லாமல் அண்ணாதுரை, கருணாநிதி, ஈ.வே.ராமசாமி சமாதிகளுக்கு சென்று வணங்கிவிட்டு பின்னர் 12 மணி முடிந்தவுடன் தலைமைச்செயலகம் சென்றார்.

இது பெரியார் மண் அல்ல ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்த ஆன்மீக மண் என நிரூபிக்க கடவுள் அவதாரம் தேவையில்லை மாறாக தி.மு.க தலைவர்களின் நடவடிக்கையே போதும் இது ஆன்மீக மண் என நிரூபிக்க.

Similar News